×

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: இஸ்ரோ தலைவர் சிவன்

பெங்களூரு: விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். விண்வெளிச் செயல்பாடுகளில் தனியாா் துறை பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் விண்வெளித்துறையில் நீண்டகாலப் பயனளிக்கும் சீா்திருத்தங்களுக்கும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்தியாவை சுயச்சாா்பு கொண்ட நாடாகவும், தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடாகவும் உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பெண்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

வெகு காலமாக தொடர்ந்து செய்யப்பட்டு வரும் சமூக - பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக விண்வெளித்துறையின் சேவைகள் நாட்டின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் உற்சாகம் அளிக்கிறது. இந்த சீர்திருத்தங்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பெற நமது இளைஞர்கள் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.  பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏற்கனவே முன்வந்துள்ளன. உலக விண்வெளி பொருளாதாரத்திற்கான ஒரு முக்கிய மையமாக இந்தியா உருவாகும் என்று உறுதியாக நம்புகிறோம். தனியார் நிறுவனங்கள் முன்வந்து விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவை உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக மாற்ற வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவை ஒரு புதிய விண்வெளி சகாப்தமாக மாற்றும், என்று கூறியுள்ளார்.


Tags : Shiva ,Federal Government ,ISRO , Space Department, Private Partnership, Central Government, ISRO, Shiva
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு