×

நாய் துரத்தியதால் சாலையோர கிணற்றில் விழுந்து மின் ஊழியர் பரிதாப பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரத்தில் பைக்கில் வந்தவரை நாய் துரத்தியதால்  நிலைதடுமாறி சாலையோர கிணற்றில் விழுந்த மின் ஊழியர் பலியானார். கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் பகுதி திப்பம்பாளையத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்(55). மின் ஊழியர். பெரிய ஓபுளாபுரத்தில் மின்கம்பங்களை சோதனை செய்ய சக மின்ஊழியர் தியாகராஜன் என்பவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது பெரிய ஓபுளாபுரத்தில் சாலை திருப்பத்தில் அப்பகுதியை சேர்ந்த நபரின் ஒருவரின் வளர்ப்பு நாய் பைக்கை துரத்தியது. பின்னால் அமர்ந்திருந்த வெங்கடேசனின் மீது கடிக்க பாய்ந்தது. இதினால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், பைக்கில் இருந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த தடுப்பு இல்லாத 70அடி ஆழ கிணற்றில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தும் வெங்கடேசனை மீட்க முடியவில்லை.

தகவலறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய அதிகாரி மாரியப்பன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்த வெங்கடேசனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். அதேபோல கும்மிடிப்பூண்டி காயலார்மேடு பகுதியை சேர்ந்த லதா (33) வீட்டருகில் இருந்த கிணற்றின் ஓரம் உட்கார்ந்திருந்த போது தவறி கிணற்றில் விழுந்தார்.  காயமடைந்த அவரை கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். லதா அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Electricity worker , Roadside well, electrical worker, killed
× RELATED பரமக்குடி அருகே சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளால் நோய் ஆபத்து