×

கேளம்பாக்கம், காஞ்சிபுரத்தில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்

திருப்போரூர்: காஞ்சிபுரம், கேளம்பாக்கத்தில், வியாபாரிகள் சங்கம் சார்பில், அனைத்து கடைகளும் அடைத்து போராட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு நேரத்தை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி போலீசார் அழைத்துச்சென்று கடுமையாக தாக்கி கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அதில், கடுமையாக பாதிக்கப்பட்ட அவர்கள் இருவரும் அங்கேயே இறந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது. கேளம்பாக்கத்தில் மருந்தகங்கள், பால் விற்பனை நிறுவனங்கள் தவிர ஓஎம்ஆர் சாலை, வண்டலூர் சாலை, கோவளம் சாலை, தையூர் மார்க்கெட் சாலை ஆகிய இடங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

காஞ்சிபுரம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதால் தந்தை, மகன் உயிரிழந்ததையொட்டி காஞ்சிபுரத்தில் நேற்று கடையடைப்பு மற்றும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் நினைவுத்தூண் அருகில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் நகர அனைத்து வியாபாரிகள் சங்க செய்தித் தொடர்பாளர் கோகுலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Merchants ,Kanchipuram , Kalamkakkam, Kanchipuram, Shop, Merchants Struggle
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...