×

விசாரணைக்கு அழைத்து சென்ற தந்தை, மகன் மரணத்தை கண்டித்து திருவள்ளூரில் முழு கடையடைப்பு

திருவள்ளூர்: தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வணிகர் சங்கம் சார்பில் திருவள்ளூரில் நேற்று முழு கடையடைப்பு நடைபெற்றது. தூத்துக்குடியில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில், சாத்தான்குளம் போலீசார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்ட மகனும், அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். தூத்துக்குடியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கம் நேற்று முழுக்கடையடைப்பு நடத்தப்படும் என அறிவித்து இருந்தது.

அதன்படி, திருவள்ளூர் நகரில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டு இருந்தன.  ஊரடங்கு உத்தரவால் பகல் 2 மணி வரை கடைகள் திறந்த நிலையில், நேற்று அதுவும் திறக்கப்படாததால் மக்கள் மளிகை பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். ஊத்துக்கோட்டை: சாத்தான்குளம் பகுதியில் வியாபாரிகளான தந்தை, மகன் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இதை கண்டித்து சம்மந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், தாமரைப்பாக்கம் பகுதியில் நேற்று ஒரு நாள் முழு கடை அடைப்பு செய்தனர்.

ஏற்கனவே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊத்துக்கோட்டை பகுதியில் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை திடீரென வணிகர் சங்கத்தின் சார்பில் கடைகளை அடைக்குமாறு கூறினர். இதனால், ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மேலும், பக்கத்து கிராமத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

Tags : Shop ,Thiruvallur , Inquiry, Father, Son, Thiruvallur, Full Shop
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி