×

திருப்போரூர் அருகே ஆலத்தூரில் மருந்து கம்பெனிக்கு வந்த சென்னை வாகனங்களை மறித்து பொதுமக்கள் மறியல்: கொரோனா பரவுவதாக புகார்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே ஆலத்தூரில், சென்னை வாகனங்களை மறித்து மறியல் செய்தனர். வெளி மாவட்ட தொழிலாளர்களால், கொரோனா பரவுவதாக புகார் கூறுகின்றனர். திருப்போரூர் அருகே ஆலத்தூரில் சிட்கோ மருந்து தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வேன் மற்றும் பஸ்களில் அழைத்து வரப்படுகின்றனர். தற்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக சில தொழிற்சாலைகள் தொடக்கத்தில் மூடப்பட்டன.

ஆனால், பெரும்பாலான தொழிற்சாலைகளில் உயிர் காக்கும் மருந்து பொருட்கள் தயாரிப்பதால் விதிவிலக்கு அளிக்கப்பட்டு அனைத்து தொழிற்சாலைகளும் திறக்கப்பட்டன. இந்நிலையில் ஆலத்தூரில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் ஊழியர்களால் கொரோனா தொற்று பரவுவதாக கூறி நேற்று காலை ஆலத்தூர் கிராம மக்கள் தொழிற்பேட்டை நுழைவாயிலில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும், வெளியூர்களில் இருந்து தொழிற்சாலைக்கு ஊழியர்களை அழைத்து வரும் வாகனங்களை மறித்து, அவர்களை தொழிற்பேட்டை வளாகத்திற்கு உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.

தகவலறிந்து, திருப்போரூர் வட்டாட்சியர் செந்தில்குமார், சிட்கோ தொழிற்பேட்டை மேலாளர் விமலா, திருப்போரூர் எஸ்ஐ ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, இன்று (நேற்று) ஒரு நாள் மட்டும் தொழிலாளர்களை அனுமதிப்பது என முடிவு செய்து வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொழிற்சாலை நிர்வாகிகள், உள்ளூர் பொது மக்கள், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் ஆகியோரின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், சென்னையில் இருந்து ஊழியர்களை அழைத்து வரக்கூடாது. சென்னையில் இருந்து வந்துள்ள ஊழியர்களுக்கு, அங்கேயே தங்கும் வசதி அளிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தினமும் வாகனங்களுக்கு கிருமி நாசினி பயன் படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Tags : coroner ,Chennai ,coroners ,drug company ,Alappuzha ,Tiruppore , Tiruppore, Drug Company, Chennai Vehicles, Pickup
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...