×

போலீஸ் தாக்கியதால் சாத்தான்குளம் வியாபாரிகள் சாவு; எஸ்.ஐ., போலீசார் மீது கொலை வழக்குபதிவு செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம்: குடும்பத்தினர் மறுப்பு

நெல்லை: போலீஸ் தாக்கியதால் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் எஸ்.ஐ.க்கள், போலீசார் உட்பட 4 பேர் மீதும் கொலை வழக்கு  பதிவு செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என குடும்பத்தினர், வியாபாரிகள் மறுத்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். அவர்களை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதே சாவுக்கு காரணம் என்று குற்றம்சாட்டி சாத்தான்குளத்தில் நேற்றுமுன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் வியாபாரிகளும் உறவினர்களும் ஈடுபட்டனர்.

2 எஸ்ஐக்கள் உட்பட 4 போலீசார்  சஸ்பெண்ட் செய்யப்படுவர், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 போலீசாரும் கூண்டோடு பணிமாற்றம் செய்யப்படுவர் என கலெக்டர் உறுதி  அளித்ததையடுத்து 7 மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையே, ெஜயராஜ், பென்னிக்ஸ் உடலை 3 டாக்டர்கள் கொண்ட மருத்துவக் குழு பிரேத பரிசோதனை செய்யவும், அதை வீடியோவில் பதிவு செய்யவும் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதற்கான ஏற்பாடுகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றுகாலை  தயார் நிலையில் இருந்தன.

இதை முன்னிட்டு கொலை செய்யப்பட்ட ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள்கள் பெர்சி, பியூலா, அபிஷா மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடற்கூறு ஆய்வு அறை முன்பு நேற்று காலை திரண்டனர்.பின்னர் மகள் பெர்சி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘எனது  அப்பாவையும், அண்ணனையும் சாத்தான்குளம் காவல்துறையினர் கொடூரமான முறையில்  அடித்துக் கொன்று விட்டனர். அடித்துக் கொன்ற போலீசார் மீது இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம். இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என்றார்.

இதற்கிடையே தந்தை, மகன் இறந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி ஜேஎம் 1 மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர் உடலில் காயங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தினார்.  இதற்கிடையே நேற்று இரவு பிரேத பரிசோதனை நடந்தது. ஆனால், சடலங்களை உறவினர்கள் பெற மறுத்து விட்டனர். கடையடைப்பு: இதற்கிடையே  வியாபாரிகள் 2 பேர் சாவுக்கு காரணமான போலீசை கண்டித்து  நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட பல மாவட்டங்கள் கடையடைப்பு போராட்டம் நடந்தது.


Tags : merchants ,police attack ,SI , Police, Satan merchants, death and murder case
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...