பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள 27,000 தமிழர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள்: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

சென்னை: கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கக் கோரி தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வெளிநாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர்? எத்தனை விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன? வந்தே பாரத் அல்லது வேறு வகையில் கூடுதல் விமானங்கள் இயக்க திட்டம் உள்ளதா? நிதியுதவி, தங்குமிடம், உணவு வசதிகள் வழங்கப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதேபோல, விமானங்கள் தரையிறங்க அனுமதியளிப்பது குறித்து தமிழக அரசின் நிலைபாட்டையும் தெரிவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வழக்கு கடந்த 19ம் ேததி விசாரணைக்கு வந்தபோது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் 40 ஆயிரத்து 433 தமிழர்கள் ஊர் திரும்ப விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 14 ஆயிரத்து 65 தமிழர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். 26 ஆயிரத்து 368 பேரின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது. வழக்கு ேநற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, மத்திய அரசு ஏற்கனவே 26,368 பேர் இன்னும் அழைத்து வரப்படவில்லை. அவர்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்திருந்தது. இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.  அப்போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக 1248 விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இதில் ஏற்கனவே 2 கட்டங்களாக 661 விமானங்கள் இயக்கப்பட்டு 2 லட்சத்து 63,187 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். மூன்றாம் கட்டமாக 587 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. தமிழகத்திற்கு 80 விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டு, 50 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதுவரை 17,701 தமிழர்கள் ஊர் திரும்பியுள்ளனர். இன்னும் 27,541 பேர் தமிழகம் திரும்ப கோரியுள்ளனர். இவர்களை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான மத்திய அரசின் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 29 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

>