×

சட்டவிரோதமாக சிம் கார்டுகள் வாங்கி கொடுத்த விவகாரம்: தென்னிந்திய காடுகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மையம் தொடங்க ஏற்பாடு

* ஆயுதங்கள், வெடிபொருட்களை கொள்முதல் செய்ததும் அம்பலம்
* தீவிரவாதிகள் உட்பட 12 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: தென்னிந்திய காடுகளில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மையம் தொடங்க அனைத்து ஏற்பாடுகள் செய்து, அதற்காக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் வாங்கியதாக தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மீது என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மண்ணூர்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (47). இவர், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டு  ஜூன் 18ம் தேதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கடலூரை சேர்ந்த  காஜாமொய்தீன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் நேரடி தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த வழக்கு க்யூ பிரிவுக்கு மாற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தீவிரவாதத்திற்கு ஆட்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க மோசடியாக சிம் கார்டுகள் வாங்கி இந்து தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது.  பின்னர் தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கி கொடுத்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் (37), சென்னையை சேர்ந்த ராஜேஷ் (34), சேலத்தை சேர்ந்த அன்பரசன் (27) மற்றும் தீவிரவாதத்திற்கு உடந்தையாக இருந்த அப்துல் ரகுமான் (44), லியாகத் அலி (29), பெங்களூருவை சேர்ந்த முகமது ஹனீப் கான் (29), இம்ரான் கான் (32), எஜாஸ்பாஷா (46), உசைன் ஷெரீப் (33),  மகபூப் பாஷா (48) என 12 பேரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு  என்ஐஏவுக்கு மாறியதும்  12 பேர் மீது சிம்கார்டுகள் மோசடி மற்றும் கொள்முதல் செய்த வழக்கில் என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கலானது.

இதில், இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் டெய்ஷின் பயங்கரவாத அமைப்புகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் தீவிரவாதி லியாகத் அலியுடன் சேர்ந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் மற்றும் சென்னையை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் ஏராளமான சிம் கார்டுகளை கொள்முதல் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அன்பரசன் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் மூலம் கடந்த 2019 செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் இடையில்  தீவிரவாதி காஜாமொய்தீன் மற்றும் மகபூப் பாஷா ஆகியோருக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வாங்க உதவி செய்துள்ளனர். உலக அளவில் பயங்கரவாத அமைப்பின் சார்பாக வன்முறை ஜிஹாத் நடத்தும் நோக்கில் தென்னிந்தியாவில் உள்ள காடுகளில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் டெய்ஷ் பயங்ரவாத அமைப்பின் மையம் (மாகாணம்) நிறுவுவதற்கான நோக்கில் தொடர்ந்து காடுகளில் முகாம் அமைத்து ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளனர்.

சென்னை மற்றும் சேலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட சிம்கார்டுகள் தீவிரவாதி காஜா மெய்தீனுக்கு கொடுத்துள்ளனர். அதன்படி காஜா மொய்தீன் அந்த சிம்கார்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள  தனது சக தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாத கூட்டாளிகளை தொடர்பு கொள்ள பயன்படுத்தி உள்ளதாக என்ஐஏ நேற்று முன்தினம் தாக்கல் செய்த தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

Tags : Organization ,ISIS Center ,South Indian Forest ,Center of ISIS System , Illegal SIM Cards, South Indian Forest, Center of ISIS System
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...