×

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைக்கு தடைகோரி வழக்கு: மத்திய அரசை வழக்கில் சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் துறையையும் சேர்க்க வேண்டும் என்று மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாயத்திற்கு நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைகடா, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை உள்பட, 27 வகை பறவைகள் ஆண்டுதோறும் வருகின்றன. இவை இதே சரணாயலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன.

இந்த பறவைகளைப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் வேடந்தாங்கள் வருகிறார்கள். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சூளைமேட்டை சேர்ந்த வக்கீல் எஸ்.ஸ்டாலின் ராஜா ஒரு பொது நல வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், வேடந்தாங்கல் சரணாயத்தின் 29.51 ஹெக்டேர். இந்த சரணாலயம் 1970க்கு முன்பிருந்தே அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்களின் பாதுகாப்பில் உள்ளது. ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக இந்த சரணாலயத்தின் பரப்பளவை 5 கிலோமீட்டரில் இருந்து 3 கிலோமீட்டராக குறைக்கும் வகையில் பரப்பளவை குறைப்பது குறித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தேசிய விலங்குகள் நல வாரியத்தி–்கு கடந்த மார்ச் 19ம் தேதி அனுப்பியுள்ளார்.

தனியார் நிறுவனத்திற்காக சட்ட விதிகளுக்கு முரணாக இயற்கையாக அமைந்துள்ள சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பது தவறான செயலாகும். இதனால், சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்துவிடும். எனவே, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பதற்கு தடை விதித்தும், விதிமுறைகளுக்கு முரணாக சரணாலயப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, இது விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், விளம்பரத்திற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றால் அபராதத்துடன் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று கருத்து தெரிவித்து இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் சம்மந்தப்பட்ட மருந்து தொழிற்சாலையையும் சேர்க்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டனர். விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.



Tags : area ,Vedanthangal Bird Sanctuary ,government ,Icort ,Reduction Area , Vedanthangal Bird Sanctuary, Prohibition, Case:, Icort
× RELATED வாட்டி வதைக்கும்...