×

காலதாமதம் செய்யாமல் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கை விரைந்து முடிவு செய்ய வேண்டும்: சபாநாயகருக்கு திமுக கோரிக்கை

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கை விரைந்து சபாநாயகர் முடிவு செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை கட்சித் தாவல் சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக அளித்த மனுவிற்கு மூன்றரை வருடங்களுக்கு பிறகு முதல்வர் பழனிசாமி 1.6.2020 அன்று அளித்த விளக்கத்தினை தமிழக சட்டப் பேரவை தலைவர் திமுகவிற்கு  அனுப்பி- அதுதொடர்பான பதில் கோரியிருந்தார்.

அதனடிப்படையில், தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவருக்கு திமுக சார்பில் உரிய விளக்கம் அளித்து கடந்த 23ம்தேதி பதில் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி, “18-2-2017 அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு 122 சட்டமன்ற உறுப்பினருக்கு மட்டுமே அரசின் தலைமை கொறடா Whip கொடுத்தார்” என்ற விளக்கத்திற்கு, “அரசியல் அமைப்பு சட்டம் பத்தாவது அட்டவணையில் Whip என்ற வார்த்தை சொல்லப்படவில்லை. Direction என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.  18-2-2017 அவையில் முதலமைச்சரும், அதிமுக சட்டமன்ற தலைவருமான பழனிசாமி தனக்கு நம்பிக்கை வாக்களிக்குமாறு கோரியது Direction ஆகும்.

அது இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றோர் அனைவரையும் கட்டுப்படுத்தும். மீறினால் கட்சி தாவலாகும்” என்று விளக்கப்பட்டு- தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதியரசர்களை கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பினை மேற்கோள் காட்டி திமுக பதிலளித்துள்ளது. இதுதவிர, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் 16-3-2017 அன்று தேர்தல் கமிஷன் முன் அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் “கொறடா உத்தரவு” (Whip) கொடுக்கப்பட்டதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்கள்” என்றும், “2017 முதல் இதுநாள் வரை அதிமுக, ஓபிஎஸ் அணிக்கு  “கொறடா உத்தரவு” என்ற நிலைப்பாட்டை எடுக்கவில்லை” என்றும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

“ஓபிஸ் அணியினர் ஒருபோதும் கட்சியின் கொள்கைகளை மீறியது இல்லை. அவர்கள் எப்போதும் போல் கட்சியில் தொடர்ந்து இருக்கிறார்கள்” என்று முதலமைச்சர் பழனிசாமி எடுத்து வைத்துள்ள வாதத்திற்கு, “தேர்தல் கமிஷன் முன் வழக்கில் 15-3-2017 அன்று  பழனிசாமி தாக்கல் செய்த சத்தியப் பிரமாண வாக்குமூலத்தில், ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறியுள்ளது” தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவருக்கு விளக்கப்பட்டுள்ளது.  “18-2-2017க்கு பிறகு தேர்தல் கமிஷன் நானும் ஓபிஎஸ் கூட்டுத் தலைமை வகிக்கும் கட்சியே உண்மையான அதிமுக என உத்தரவிட்டுள்ளது” என்று முதலமைச்சர் அளித்துள்ள விளக்கத்திற்கு, “தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள், அரசியல் அமைப்புச் சட்டம் பத்தாவது அட்டவணையில் உள்ள நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நாளில் உள்ள நிகழ்வுகளையே கணக்கில் கொள்ள வேண்டும். பின்னாளில் நடப்பவைகளை கருத்தில் எடுத்துக் கொள்ள முடியாது” என்று “ராஜேந்திர சிங் ரானா” வழக்கில் 5 நீதியரசர்களைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் பேரவைத் தலைவருக்கு கழகத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பினர் கட்சியில் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையில் அப்போதே அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்ததை மன்னித்துவிட்டோம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ள வாதத்திற்கு, “அரசியல் அமைப்புச் சட்டம் பத்தாவது அட்டவணையின் பிரிவு 2பியின்படி எழுத்துப்பூர்வமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நாளிலிருந்து 15 நாட்களில் “மன்னித்த விவரத்தை” சபாநாயகருக்கு தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டப் பேரவை (தகுதி நீக்கம் மற்றும் கட்சி தாவல்) விதிகள் 1986 பிரிவு 3(6)-ன் படி நம்பிக்கை வாக்கெடுப்பு நாளிலிருந்து 15 நாட்களுக்குப் பிறகு 30 நாட்களுக்குள்ளாக படிவம் 2-ன் படி எழுத்துப்பூர்வமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நாளிலிருந்து சபாநாயகருக்கு மன்னித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். இந்நிகழ்வில் அதுபோல் நடக்கவில்லை” என்று மிக தெளிவாக திமுக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இனிமேலும் கால தாமதம் செய்யாமல் - அரசியல் சட்டமும், உச்ச நீதிமன்றமும் சபாநாயகரிடம் எதிர்பார்க்கும் நடுநிலைமையுடனும், நேர்மையுடனும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கினை விரைந்து முடிவு செய்வார் என்று திமுக சார்பில் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,OPS ,speaker , 11 MLA, including OPS, elimination case, Speaker, DMK
× RELATED அக்‌ஷரா திடீர் முடிவு