×

அதிமுக ஆட்சியா, சட்டத்தை கையில் எடுத்து செயல்படும் போலீஸ் ஆட்சியா?... மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: மக்களின் உயிர் பறிக்கும் எதிரியாக மாறியிருப்பதன் மூலம், இந்த மாநிலத்தில் நடப்பது பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியா, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படும் போலீஸ் ஆட்சியா என்று பொதுமக்கள் கேட்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது என்று திமுக தலைவர்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்: காவல் துறையில் உள்ள சில அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மனித உரிமை மீறலின் உச்சக்கட்டமாக இருப்பதுடன், மக்களின் உயிரைப் பறிக்கும் காட்டுத் தர்பாராகவும் மாறியிருக்கிறது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் (60) வயது மூத்த குடிமகனும், அவரது மகனான 31 வயது பென்னிக்ஸ் என்ற இளைஞரும், காவல் விசாரணையில் கடுமையாகத் தாக்கப்பட்டு, அதன் காரணமாக அப்பா - மகன் இருவரும் உயிரிழந்துள்ள கொடூரம், தமிழகத்தில் உள்ள அனைவருடைய நெஞ்சத்தையும் உறைய  வைத்துள்ளது.

 தனிப்பட்ட காழ்ப்புணர்வுடன் செயல்பட்டு, இரண்டு உயிர்ப்பலிகளுக்குக் காரணமாகியிருப்பது, காவல்துறையினர் சிலர் இந்த ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி, சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு உள்நோக்கத்துடன் செயல்பட எடப்பாடி அரசு அனுமதித்துவிட்டதோ என்கிற ஐயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. காவல் விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜின் மனைவியும் - பென்னிக்ஸின் தாயாருமான செல்வராணி, காவல் நிலையக் கொடுமைகளைக் கண்ணீருடன் விவரித்து, டி.எஸ்.பி, ஆட்சியர் என அனைவருக்கும் புகார் தெரிவித்துள்ளார். பென்னிக்ஸின் சகோதரி கதறித்துடிக்கும் காணொலியைக் காணவே வேதனையாக உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் பழனிசாமியோ, பென்னிக்ஸ் மூச்சுத் திணறலாலும், ஜெயராஜ் உடல்நலக்குறைவாலும் இறந்தார்கள் என்று உண்மையை மறைத்தும், திரித்தும் கூறியிருக்கிறார். இந்த  மாநிலத்தில்  நடப்பது பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியா, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படும் போலீஸ் ஆட்சியா என்று பொதுமக்கள் கேட்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

இளைஞர் சங்கர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருப்பது காட்சியாகப் பதிவாகியுள்ள நிலையில், அவரைக் கொன்றவர்கள் யார் என்பதைச் சட்டத்தின் முன் உரிய சாட்சியத்துடன் நிரூபித்து, இளம்பெண் கவுசல்யாவுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்திடுமா? காவல் துறை அதிகாரிகளே, மனித நேயம் மறந்து, குற்றவாளிகள் பக்கம் நிற்பதையும், துப்பாக்கிச்சூட்டிலும் - காவல் விசாரணையிலும் அப்பாவி மக்களின்  உயிர்பறித்து நீங்களே குற்றவாளிகளாகும் செயல்களையும் தவிர்த்து விடுங்கள். காலச்சக்கரம் இப்படியே சுழன்று கொண்டிருக்காது என்பதையும் மனதில் கொள்ளுங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : AIADMK , AIADMK rule, police rule, MK Stalin
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...