சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு சோதனை: பாழடைந்த கட்டிடங்களில் தனிமைப்படுத்தப்படும் அவலம்

* எலி, பாம்பு பக்கத்துலேயே ஓடுது

* குழந்தைகளுடன் தவிக்கும் பெற்றோர்கள்

* அரசு அதிகாரிகள் கெடுபிடி

சென்னை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத பாழடைந்த கட்டிடங்களில் தங்க வைக்க சொல்லி மிரட்டும் அரசு அதிகாரிகளால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வருவதால் பயந்து போன சென்னை வாழ் தென்மாவட்ட மக்கள் ஊரை காலி செய்துவிட்டு சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியான உடன் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு உரிய அனுமதியுடனும், அனுமதி இல்லாமலும் சென்றவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.

இவர்கள் எப்படி சென்றாலும் மாவட்ட எல்லைகளை தாண்டி செல்ல முடியாதபடி செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதையும் தாண்டி ஊருக்குள் சென்றாலும் உறவினர்களே சுகாதாரத் துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கும் நிலைதான் உள்ளது. மாவட்ட எல்லைகளில் மடக்கும் அரசு அதிகாரிகள் கொரோனா டெஸ்ட் எடுக்கின்றனர். அதற்கான ரிசல்ட் வரும் வரை பழைய அரசு கட்டிடங்கள் அல்லது பாழடைந்த நிலையில் உள்ள கல்லூரி அல்லது விடுதிகள், பள்ளி கட்டிடங்களில் தங்க வைக்கின்றனர். இந்த கட்டிடங்கள் பல நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் மிகவும் சிதிலமடைந்து உள்ளன.

கரையான்புற்று, எலிகள், பாம்பு அங்கும் இங்கும் ஓடக்கூடிய அறைகளாக உள்ளன. அவற்றை சுத்தம் செய்து கூட கொடுக்காமல் இங்கு தான் இருக்க வேண்டும் என்று அந்த அதிகாரிகள் மிரட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன. பரிசோதனை முடிவு வரும் வரை இந்த பாழடைந்த கட்டிடங்களில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தங்க வைக்கப்படுகின்றனர். கழிவறையில் கதவும் இல்லை. கட்டிடங்களின் ஒதுக்குபுறத்தில் இருப்பதால் இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி கூட இல்லாமல் பயத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் படையெடுப்பதாகவும் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத கட்டிடங்களை தேர்வு செய்து தங்க வைப்பது சென்னையிலிருந்து வருபவர்களை அச்சுறுத்துவதாக உள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கினாலும், அதை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் முறையாக பயன்படுத்துவதில்லை என்ற புகாரும் உள்ளது. 3 நாட்கள் தங்கினாலும், தங்கள் சொந்த  வீடுகளுக்கு சென்றுவிடலாம் என்பதால், இதை எல்லாம் பொறுத்துக் கொண்டு தங்கள் குமுறல்களை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ் பரிசோதனை முடிவு் எப்படி இருக்குமோ என்ற பயமும் அவர்களை வாட்டுகிறது.   

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‘‘சென்னையிலிருந்து உயிர் பயத்தில்தான் எங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்தோம். நல்ல வருமானத்துடன் தான் சென்னையில் வசித்து வருகிறோம். ஆனால் சொந்த ஊருக்கு செல்வதற்குள் நாங்கள் அகதிகளாகவே இருக்க நேரிட்டுள்ளது. கழிப்பறையில் கதவு இல்லாமல் எப்படி உபயோகப்படுத்துவது, பச்சிளங்குழந்தைகளுடன் பல மாதங்களாக சுத்தப்படுத்தப்படாத அறையில் கரையான் புற்று அறையில், பகலிலும் எலிகள் நடமாட்டம் இருக்கக்கூடிய அறையில் தங்க வைத்தது எங்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. பரிசோதனை செய்த பின்பு ஊருக்கு செல்வதை ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் அதுவரை தங்க வைக்கக்கூடிய தனிமை முகாம்களை நினைத்தால்தான் நெஞ்சு பதறுகிறது. இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதை அரசு அதிகாரிகள் என்ன செய்தார்கள். எந்த வசதியும் இல்லாத இந்த இடத்தில் எப்படி தங்க முடியும் என்று கேள்வி எழுப்பினால் போலீசாரை வைத்து வழக்கு பதிவு செய்வதாகவும் அரசு அதிகாரிகள் மிரட்டுகின்றனர். மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகள் உயிர் பயத்தில் தப்பி வரும் எங்களை போன்றவர்களை  மேலும் அச்சுறுத்தலுக்குள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயம். எனவே, தென்மாவட்டங்களில் தனிமைப்படுத்தும் முகாம்களில் உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Related Stories: