×

பெங்களூரு, கொல்கத்தாவில் அடுத்தடுத்து பயங்கரம்; மனைவி, மாமியாரை சுட்டுக் கொன்று ஆடிட்டர் தற்கொலை: குடும்ப பிரச்னையால் விபரீதம்

கொல்கத்தா: குடும்ப  பிரச்னை, ஒரு ஆடிட்டரின் குடும்பத்தையே சிதைத்து விட்டது. பெங்களூருவில் மனைவியை சுட்டுக் கொன்ற ஆடிட்டர்,  கொல்கத்தா சென்று மாமியாரை சுட்டுக் கொன்றார். பின்னர், தானும் சுட்டுக் கொண்டு இறந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா  மாநிலம், பெங்களூருவில் உள்ள பிளாட்டில் வசித்து வந்தவர் அமித் அகர்வால் (42). இவருடைய மனைவி ஷில்பி (40).  இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இவருடைய மாமனார் சுபாஷ் (70),  மாமியார் லலிதா தண்டானியா (65) மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில்  வசித்து வந்தனர். ஆடிட்டரான அமித் அகர்வாலுக்கும், ஷில்பிக்கும் ஏழாம் பொருத்தம். எப்போதும் சண்டை, சச்சரவு. இதனால், விவாகரத்து கேட்டு இருவரும் நீதிமன்ற படியில் ஏறி, இறங்கி வந்தனர். இந்த மோதலால், அகர்வால் தனியாக வசித்து வந்தார். அடிக்கடி தனது மனைவியை கொல்ல வேண்டும் என்று வெறியோடு திரிவார்.

சில நாட்களுக்கு முன் அதற்கான வாய்ப்பு கிடைத்ததும், பெங்களூரு பிளாட்டில் தனியாக இருந்த ஷில்பியை  துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அங்கிருந்த தனது மகனை அழைத்துக்  கொண்டு நேற்று முன்தினம் விமானத்தில் கொல்கத்தா சென்றார். மகனை நண்பர் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு, கன்குர்காச்சியால் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். ‘உங்க மகளால என்னோட வாழ்க்கை தொலைஞ்சி போச்சு... அதற்கு நீங்களும்தான் காரணம்,’ என கூறி, துப்பாக்கியை எடுத்து நீட்டினார். அவர்கள் உயிருக்காக அவரிடம் கெஞ்சினர். ஆனால், அகர்வால் அவர்களை சுட்டார். முதலில் மாமியாரை சுட்டுத் தள்ளினார். அவர் இறந்தார். அடுத்து, மாமனாருக்கு குறி வைத்தார். அதற்குள் அவர் போட்ட சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து விட்டனர். அந்த பதற்றத்தில் அகர்வால் சுட்டதால் மாமனாருக்கு குண்டு உரசி சென்றதே தவிர, அவரை துளைக்கவில்லை.

இனி தப்பிக்க முடியாது என நினைத்த அகர்வால், தன்னைத்தானே  சுட்டுக் கொண்டு ரத்த வெள்ளத்தில் வீழ்ந்து இறந்தார். போலீசார் வந்து சடலங்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். அகர்வால் தனது பேண்ட் பாக்கெட்டில் 67 பக்கங்கள் கொண்ட கடிதத்தை எழுதி வைத்திருந்தார். அதில், ‘பெங்களூருவில் என் மனைவியைக் கொன்று விட்டேன்’  என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, பெங்களூரு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. சற்று நேரத்தில், ஷில்பியின் மரணத்தை பெங்களூரு போலீசாரும் உறுதி செய்தனர். அகர்வால் தனது மாமனார் குடும்பத்தினர் அனைவரையும் கொல்ல திட்டம் போட்டுள்ளார். இதற்காக, டெல்லியின் குருகிராமில் தங்கியிருக்கும் தனது மைத்துனரையும் கொல்கத்தா வரும்படி அழைத்துள்ளார். ஆனால், அவர் வராதால் தப்பினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

67 பக்க கடிதம்
அமித் அகர்வால் எழுதியுள்ள 67 பக்க கடிதத்தில், ஒரு பக்கம் மட்டுமே அவர் கைப்பட எழுதியுள்ளார். மற்ற பக்கங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்டுள்ளது. அதில், தனது மனைவி, மாமனார் குடும்பத்தை கொல்ல முடிவு செய்ததற்கான காரணங்களை விரிவாக எழுதி இருக்கிறார்.

யூடியூப்பில் பயிற்சி
அமித் அகர்வாலின் லேப்டாப்பை போலீசார் சோதனை செய்ததில், துப்பாக்கியை பயன்படுத்தும் முறையை அறிய பல யூடியூப் வீடியோக்களை பார்த்துள்ளார். அதன்படி, நீண்ட காலமாக  திட்டமிட்டு 2 கொலைகளை செய்துள்ளார். அவர் துப்பாக்கியை எங்கு வாங்கினார் என தெரியவில்லை. அது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : Next Terror ,Bengaluru ,Kolkata ,mother-in-law , Bangalore, Kolkata, wife, mother-in-law, auditor suicide
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே...