மீண்டும் களமிறங்க ரெடி... ஆர்ச்சர் உற்சாகம்

லண்டன்: காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், முழுமையாக குணமடைந்த நிலையில் மீண்டும் களமிறங்கத் தயாராகி உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்ரிக்க டி20, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இருந்து ஆர்ச்சர் விலக நேர்ந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர், ஐபிஎல் தொடரிலும் இருந்து விலகினார். ஆனால், கொரோனா பீதி காரணமாக ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட இடைவெளிக்குப் பின்னர் நடைபெற உள்ள முதல் சர்வேதச கிரிக்கெட் போட்டியாக, இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் பூட்டிய அரங்கில் ஜூலை 8ம் தேதி தொடங்குகிறது. இதற்கிடையில் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஆர்ச்சர் முழுமையாக குணமடைந்துள்ளார்.

மீண்டும் களமிறங்குவது குறித்து கூறுகையில், ‘தற்போது நான் முழுமையாக குணமடைந்துள்ளேன்.  புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். பந்துவீசும் அளவுக்கு நல்ல உடல்தகுதியுடன் உள்ளேன். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தயாராக இருக்கிறேன். குறுகிய காலத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் நடந்தாலும் என்னால் விளையாட முடியும். அதற்காக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் ஆர்ச்சர் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2 சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்காக விளையாடி உள்ளார். ரூ.7.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர் முதல் சீசனில் 15 விக்கெட், 2வது சீசனில் 11 விக்கெட் வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>