×

சீனாவுக்கு எதிராக பொங்கினதெல்லாம் 4 நாள்தானா? ஒரே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த ஒன் ப்ளஸ் 8 ப்ரோ மொபைல்: போயோ போச்சு எதிர்ப்பு கோஷங்கள்

புதுடெல்லி: சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷங்கள் சமூக வலைத்தளங்களில் ஒருபுறம் அனலடித்துக் கொண்டிருந்தாலும், அந்நாட்டு மொபைல்களுக்கான டிமாண்ட் நம்மவர்களிடம் துளி குறையவில்லை. சீனாவின் ஒன் ப்ளஸ் 8 ப்ரோ புதிய மாடல் மொபைல், இந்தியாவில் அறிமுகமான சில நிமிடங்களில் ஒன்று பாக்கியில்லாமல் விற்றுத் தீர்ந்ததே அதற்குச் சாட்சி. இந்திய ஸ்மார்ட் போன் சந்தையை சீன நிறுவனங்கள் நீண்டகாலமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் முதல் ஐந்து ஸ்மார்ட் போன்களில் நான்கு (சியோமி, விவோ, ரியல்மே, ஒப்போ) சீன தயாரிப்புகளாகும். சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த சீன சேல்ஸ்மேளாவுக்கு, கடந்தவாரம் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் சம்பவம் பெரிய முட்டுக்கட்டை போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சீன துருப்புகளின் அத்துமீறிய திடீர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், சீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற கோஷம் சமூக வலைத்தளங்களில் கொடிகட்டிப் பறந்தது. சீன தயாரிப்பு டிவிகள், மொபைல் போன்களை தெருவில் வைத்து உடைக்கும் போராட்டங்களும் நடந்தன. சரிதான்... சீன பொருட்களின் சீன் முடிந்தது என்ற சராசரி இந்திய மக்களின் எண்ணத்தை தகர்த்திருக்கிறது ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் புதிய வரவான 8 ப்ரோ ஸ்மார்ட் போன். இந்திய பிரிமியம் மாடல் ஸ்மார்ட் போன் (ரூ.30 ஆயிரத்துக்கு மேல் விலை கொண்டவை) சந்ைதயில் சீன நிறுவனமான ஒன் ப்ளஸ்க்கு முக்கிய இடம் உண்டு. இந்த நிறுவனத்தின் புதிய மாடல்களான ஒன் ப்ளஸ் 8 மற்றும் 8 ப்ரோ ஆகியவை ஏப்ரல் மாதமே அறிமுகமாகி விட்டாலும், கொரோனா ஊரடங்கால் இந்தியாவுக்குள் நுழைய முடியாமல் இருந்தது. ஒருவழியாக, இரு மாடல்களும் இந்தியாவுக்குள் நுழைந்து விட்டன.

கடந்த வியாழனன்று (ஜூன் 18) அமேசான் ஆன்லைன் தளத்தில் ஒன் ப்ளஸ் 8 ப்ரோ மாடல் அறிமுகம் ஆனது. அறிமுகமான சில நிமிடங்களில் அத்தனையும் சோல்ட் அவுட். எத்தனை போன்கள் விற்றுத் தீர்ந்தன என்ற விவரத்தை அமேசான், ஒன் ப்ளஸ் நிறுவனங்கள் வெளியிடவில்லை. ஆனாலும், சீன பொருட்களுக்கான எதிர்ப்புணர்வு அலையடித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், சீன தயாரிப்பான ஒன் ப்ளஸ் 8 ப்ரோ விற்பனை நம்மூரில் பட்டையைக் கிளப்பியிருப்பது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘சீன எதிர்ப்பலை எந்த விதத்திலும் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை’’ என்று வர்த்தக புள்ளிவிவரங்கள், இந்த விற்பனையை மேற்கோள் காட்டி தெரிவிக்கின்றன.

‘எப்டி சார் வித்துச்சு?’
சீன எதிர்ப்பலையை மீறி ஒன் ப்ளஸ் எப்படி கரை சேர்ந்தது? தொழிற்துறை நிபுணர்களிடம் கேட்டபோது, ‘‘இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் ஒன் ப்ளஸ்க்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. தற்போதைய லாக் டவுன் பிரச்னையால் ஒர்க் அட் ஹோம், ஆன்லைன் வகுப்புகள் போன்ற புதிய மாற்றங்களை இந்தியர்கள் எதிர்கொள்கின்றனர். இவர்களது இன்றைய அடிப்படை தேவை ஓரளவுக்கு நல்ல ஸ்மார்ட் போன். இந்தியர்களின் இந்த புதிய தேவையே, ஒன் ப்ளஸ் 8 ப்ரோவை ஜெயிக்க வைத்திருக்கிறது’’ என்கிறார்கள்.

Tags : China , China, One Plus 8 Pro Mobile
× RELATED சொல்லிட்டாங்க…