×

திண்டுக்கல்லில் தொடர் மணல் கொள்ளையால் அழிந்துவரும் குடகனாறு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்.. விவசாயிகள் வேதனை!!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் தொடரும் மணல் கொள்ளையால் குடகனாறு கரைகள் அழிந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் குடகனாறு கரை உள்ளது. சீவகரகு ஊராட்சி, வீரகரகு ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த குடகனாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் நீர்வரத்துக்கு மாங்கரையாறு, சந்தனவர்த்தினி ஆறு, வரட்டாறு, மான்கோம்பையாறு ஆகிய சிற்றாறுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆத்தூர், திண்டுக்கல், வேடசந்தூர் வழியாக ஆற்றில் செல்லும் தண்ணீர் அழகாபுரியில் உள்ள குடகனாறு அணையில் தேங்கி நிற்கும். மேலும், வேடசந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் விவசாய ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்நிலையில்  குடகனாறு ஆற்றில் அரசின் உத்தரவை மீறி இரவு பகல் பாராமல் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆற்றின் அருகில் விவசாய நிலங்கள் அதிகளவில் இருப்பதால் இந்த மணல் கொள்ளையின் காரணமாக நீர் மட்டம் கணிசமாக குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. இதன் காரணமாக விவசாயம் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது.

 இந்த மணல் கொள்ளையானது இரவு, பகல் பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆத்தூர் பகுதியில் இருந்து வேடசந்தூர் வரை உள்ள குடகனாற்றில் ஜேசிபி இயந்திரம் மூலமாக தடுப்பணைகளை உடைந்து, அத்துமீறி மணல்கொள்ளை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பலமுறை கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் மலை போல் மணல்களை குவித்து வைத்து மர்மநபர்கள் அதிகவிலைக்கு விற்று வருவதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். இதனால் ஆற்றின் கரைகள் சேதமடைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



Tags : Dindigul ,sand dungeon ,ruins ,Continuous Sand Dindigul ,Kutakanaru Endangered , Dindigul, serial, sand robbery, extinct, puddle, authorities, farmers, agony
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்