×

மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையிலும் திருவாரூரில் பாலப் பணிகளால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் வேதனை!!!

திருவாரூர்:  திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆற்றின் குறுக்கே பாலப்பணிகள் நடைபெற்று வருவதால், குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கிடைக்காமல் 9 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதித்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில், அந்த தண்ணீருக்காக காத்திருந்த திருவாரூரிலுள்ள பலவனக்குடி, கேக்கரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. தண்டலை மற்றும் மருதப்பட்டினம் ஆகிய 2 இடங்களில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இப்பகுதிக்கு வராததால், 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாதித்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னரே உழவு பணிகளை முடித்துவிட்டு தண்ணீர் வந்தவுடன் நாற்றங்கால் பணிகளை தொடங்கலாம் என காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. தற்போது, அறுவடை பணிகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், இதனால் தண்ணீர் வருவதற்கு உடனடியாக பாலப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும்,  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் கேட்டபோது, தண்ணீர் வரும்பொழுது கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.



Tags : opening ,town ,Mettur Dam ,Thiruvarur , Mettur Dam , opened, farmers, agonizing ov, water , cross cultivation , bridge work, Tiruvarur
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு