×

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய விவகாரம்: மருந்து தொழிற்சாலையை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய விவகாரத்தில் மருந்து தொழிற்சாலையை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சரணாயத்திற்கு 27 வகையான பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்துக்காக வருகின்றன. மேலும் இந்த பறவைகளைப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும் வேடந்தாங்கல் வருகிறார்கள்.

தற்போது சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.இதனை அடுத்து வேடந்தாங்கலின் பரப்பை குறைக்க தடை விதிக்க கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஸ்டாலின் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ள தகவல்கள், வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பு 29.51 ஹெக்டேர். கடந்த 1996-ல் வேடந்தாங்கல் சரணாலயத்தில் உள்ள குளத்தை சுற்றி 5 கிலோமீட்டர் பரப்பளவு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக இந்த சரணாலயத்தின் பரப்பளவை 5 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டராக குறைத்து அறிவிப்பதற்கான கருத்துருவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தேசிய விலங்குகள் நல வாரியத்துக்கு கடந்த மார்ச் 19-ம் தேதி அனுப்பி வைத்துள்ளார் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய விவகாரத்தில் மருந்து தொழிற்சாலை மற்றும் மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும்  வழக்கறிஞர் ஸ்டாலின்ராஜா தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதனையடுத்து விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்திருந்தால் அபராதத்துடன் மனு தள்ளுபடி செய்யப்படும் எனவும்  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Vedanthangal Bird Sanctuary ,counterpart ,Icort ,factory , Vedanthangal ,Bird, Sanctuary,Icord,pharmaceutical ,factory
× RELATED ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்கும்...