×

20 ஆண்டுகளாக தூர்வாராததை கண்டித்து ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

மன்னார்குடி: 20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத சாளுவன் ஆற்றை தூர்வாரக் கோரி விவசாயிகள் ஆற்றுக்குள் இறங்கி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் ஓடும் முக்கியமான நீராதார மான கோரையாற்றில் வேதபுரம் தலைப்பில் இருந்து சாளுவன் கிளை ஆறு பிரிகிறது. இந்தஆறு வேதபுரம், அக்கரை கோட்டகம், களப்பால், மீனம்பநல்லூர், மருதாவனம், எழிலூர், வங்கநகர் உள்ளிட்ட 20கிராமங்களின் வழியாக 12 கி.மீட்டர் தூரம் சென்று நெடும்பலம் அருகே மரைக்கா கோரையாற்றில் கலக்கிறது. இந்த ஆறு மூலம் 40ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மழைக்காலங்களில் சாளுவன் ஆறு வடிகாலாகவும் பயன்படுகிறது.

கடந்த 20 வருடங்களாக சாளுவன் ஆறு தூர்வாரப்படாததால் ஆறு முழுவதும் கருவை மரங்கள், கோரைகள் மண்டி சீரான நீர்வரத்தை தடுக்கிறது. இந்த ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டும் என்று திமுக, சிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் விடுத்தும், கடந்தாண்டு சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், சாளுவன் ஆற்றை தூர்வாருவதற்கு இந்தாண்டு ரூ.30லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்று வரை பணிகள் துவக்கப்படவில்லை. தூர்வாரும் பணிகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் உடனடியாக துவங்க வேண்டும்.

வாய்க்கால்களில் உடைந்து போன மதகுகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் திமுக எம்பியும், மாநில விவசாயஅணி செயலாளருமான ஏகேஎஸ் விஜயன் தலைமையில் கோட்டூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பாலஞானி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன் மற்றும் 200 விவசாயிகள் நேற்று காலை மீனம்பநல்லூர் கிராமத்தில் சாளுவன் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஏகேஎஸ் விஜயன் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக சாளுவன் ஆறு தூர்வாரப்படவில்லை. கீழ்ப்புத்தூர் பாசன வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு வாய்க்கால்களில் கஜா புயலில் சாய்ந்த மரங்கள் கூட இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வடிவத்தில் தேக்கம் ஏற்படுவதோடு, ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிர்கள் நீரில் முழுகும் அபாயமும் உள்ளது. எனவே தமிழக அரசு தூர்வாரும் பணிகளை உடன் துவக்க வேண்டும். இனியும் காலதாமதம் ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags : protest ,river , Farmers' protest, down , river , 20 years
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...