×

வரத்து குறைவால் உச்சம் தொட்டது கருவாடு விலை: அசைவ பிரியர்கள் அவதி

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மீனுக்கு இணையாக கருவாடும் மக்கள் விரும்பி சாப்பிடுவதுண்டு. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் இதற்காகவே மீனை பிடித்து பதப்படுத்தி, காய வைத்து கருவாடாக்கி விற்பனைக்கு அனுப்பி வைப்பர். நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள சிறு, சிறு வியாபாரிகள் பொதுவாக மேலப்பாளையம் சந்தைக்கு வரும் கருவாடுகளை வாங்கி அந்தந்த பகுதிகளில் விற்பனை செய்வதுண்டு. மேலப்பாளையம் சந்தை 4 மாதங்களாக பூட்டி கிடக்கும் சூழலில், நெல்லை கடலோர பகுதிகளில் இருந்து கருவாடு வரத்தும் தற்போது குறைந்து விட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாததால் கருவாடு உற்பத்தியும் குறைந்து விட்டது. நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு தற்போது ராமேஸ்வரம், திருச்சி பகுதிகளில் இருந்தே கருவாடு கொண்டு வரப்படுகிறது. கயத்தாறில் இருந்து மொத்த வியாபாரிகள் அவற்றை கொள்முதல் செய்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

ராமேஸ்வரத்திலும் தேவைக்கேற்ப தற்போது கருவாடு கிடைப்பதில்லை. இதனால் அதன் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக சாலை கருவாடு ஒரு கிலோ ரூ.300 வரை விற்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.100க்கு விற்றது. முறல் கருவாடு விலையும் ரூ.300 வரை சென்றுள்ளது. சாலை மீன்களின் விலையே கிலோ ரூ.120க்கு விற்கப்படும் நிலையில், கருவாடுகளின் விலை மும்மடங்கு உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சீலா கருவாடுகளின் விலை தற்பாது ரூ.ஆயிரத்து 200ஐ தொட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு சீலா கருவாடுகளின் விலை ரூ.800 ஆக இருந்தது. தற்போது சீலா மீன்களின் விலையும் கிலோ ரூ.ஆயிரத்திற்கு விற்கப்படும் சூழலில், கருவாடு விலை உயர்ந்துள்ளது.
இதேபோல் முன்பு கிலோ ரூ.220க்கு விற்கப்பட்ட மஞ்சப்பாறை கருவாடுகள், இப்போது கிலோ ரூ.800 ஆக உயர்ந்துள்ளது. நெத்திலி கருவாடுகளின் விலை ரூ.200லிருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கருவாடுகளின் விலைகளை விசாரிக்கும் வாடிக்கையாளர்கள், அதற்கு மீன் விலையே பரவாயில்லை எனக்கூறி, அதன்பக்கம் சென்று விடுகின்றனர். கருவாடு விலையேற்றம் அசைவ பிரியர்களை மட்டுமின்றி, சிறு, குறு வியாபாரிகளையும் அதிகம் பாதித்துள்ளது.

Tags : Maruti , Maruti, prices, skyrocketed, inflation
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...