×

முடங்கிய வீடுகளில் சதா துப்பாக்கி சத்தம் - கூச்சல் உளவியல் ரீதியாக மனதை பாதிக்கும் ப்ரீ பயர், பப்ஜி சீன விளையாட்டு: தடை செய்ய பெற்றோர் வேண்டுகோள்

புதுச்சேரி: கொரோனாவால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் சீனாவின் பப்ஜி மற்றும் ப்ரீ பயர் விளையாட்டில் மூழ்கி கிடக்கின்றனர். இதனால் உளவியல் ரீதியாக பிள்ளைகள் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலையில் மூழ்கி உள்ளனர். இதனை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 63 ஆயிரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 35 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். கிட்டத்திட்ட 800 பேர் பலியாகி உள்ளனர். பெரும்பாலும் நகரத்தில் பிள்ளைகளை வெளியே விடாமல் பெற்றோர்கள் பார்த்து கொள்கின்றனர். ஆனால் தற்போது வீடுகளில் சுடுடா சுடுடா என்ற சத்தம் கேட்க முடிகிறது. ஏன்டா நான்தான் சொன்னேனே அவன் மறைந்து இருக்கிறான்.

நான் வீட மாட்டேன்டா என ஆவேச குரல் கேட்கிறது. டேய் சுட்டுடா சுட்டுடா என மறுமுனையில் குரல் வருகிறது. அதனை தொடர்ந்து அவன் சுடுகிறான். ஒரு வீரர் இறக்கிறான். உடனே இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொள்கின்றனர். இப்படியாக ஒவ்வொரு நாளும் செல்கிறது. உரக்க குரலில் தன்னந்தனியாக பிள்ளை பேசும்போது வீட்டில் உள்ள பெற்றோர் அதிர்ச்சியடைந்து என்ன என்று பார்க்கின்றனர். என்னடா இது கேம்மு... இருக்கிற நிலையில் இதுதேவையா? என அலுத்து கொள்கின்றனர். இந்த விளையாட்டு சீனாவின் பப்ஜி. மற்றொன்று ப்ரீ பயர். இந்த விளையாட்டில் தான் தமிழகத்தில் நகரம் மற்றுமின்றி கிராமங்களில் உள்ள சிறுவர்கள், மாணவர்கள் பைத்தியமாக விளையாடுகின்றனர். இந்த விளையாட்டு என்ன? இதனால் பாதிப்பு என்ன? என்பதை பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது.

`Player’s Unknown Battle Ground’ என்பதன் சுருக்கமே ‘PUBG’. ஐரிஸ் நாட்டின் ‘பிராடன் கிரீனி’ என்பவர் உருவாக்கிய இந்த கேமை, உலக முழுவதும் சீனாவில் பிரபலமாகி உள்ளது. முதலில் வெளிநாடுகளில் மட்டுமே விளையாடப்பட்டு வந்த இந்த கேம், கடந்த 2018ம் ஆண்டில் மார்ச் மாதம்தான் இந்தியாவில் அறிமுகமானது. அறிமுகமாகிய சில மாதங்களில் அதிமானோர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளனர். சிறிய தீவுகளை உள்ளடக்கிய பெரிய தீவில், 100 பேரை ஆயுதங்களுடன் களத்தில் இறக்கி விடுவர். தங்களை காத்துக்கொள்ள மற்றவர்களை அவர்கள் கொல்ல வேண்டும். இறுதியில் யார் உயிரோடு இருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். அனைவரையும் இந்த விளையாட்டு ஈர்ப்பதற்கு முக்கிய காரணமே, இந்த கேமில் பயன்படுத்தப்பட்ட உயர்தர கிராபிக்ஸ் தொழில்நுட்பம். இந்த கேம் விளையாடுபர்களுக்கு தங்களை காப்பாற்றிக்கொள்ள புதிய ஐடியாக்கள் வழங்கப்படுகிறது. அதிகபடியான ஆயுதங்கள் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்ச ரேம், பிராசசர், கிராபிக்ஸ் வசதிகள்  உள்ளவற்றில் கூட பப்ஜி வீடியோ கேம் விளையாட முடிகிறது.

 இது ஒரு சாதரண விளையாட்டுதானே. நம்மை என்ன செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம். இதுபோலத்தான் புளூவேலும் ஒரு சாதாரண விளையாட்டாக தொடங்கியது என்பதை நாம் மறந்துவிட முடியாது. புளூவேல் அளவுக்குஇது பாதகமான விளையாட்டு தெரியாவிட்டாலும், இந்த விளையாட்டால் உளவியல் பாதிப்பு ஏற்படுகிறது. மற்றவர்களிடமிருந்து தனிமைபடுத்தி, இயற்கையான உலகத்திலிருந்து நம்மை பிரித்து செயற்கையான உலகில் வாழவைக்கிறது. எப்போதும் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பதற்ற நிலையை ஏற்படுத்துகிறது. இரவு முழுக்க பப்ஜி விளையாடுவதால் அதிக சோர்வு ஏற்பட்டு சகஜமான வேலைகளை செய்யாமல் தவிர்க்கும் பழக்கம் ஏற்படும்.  எப்போதும் ஒருவித பதற்றத்தில் நம்மை இருக்க வைக்கும் அளவுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விளையாட்டு விளையாடுவதால், நமது தனித்தன்மையான சிந்தனை மழுங்கடிக்கப்படும். மற்றவர்கள் மேல் உள்ள வன்மம் அதிகரிக்கும். இந்த விளையாட்டு மருத்துவர்கள் டிஜிட்டல் போதை பொருள்’ என்று அழைக்கின்றனர்.

ஆரம்பத்தில் இந்த விளையாட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட பல தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஆளும் அரசுகள் இதனை கண்டு கொள்ளவில்லை. கொரோனாவால் வீட்டில் முடங்கி கிடக்கும் மாணவர்கள், செல்போனில் இந்த விளையாட்டில் தான் மூழ்கி கிடக்கின்றனர். இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பிள்ளைகள் சாப்பிட மாட்ேடன் என மறுக்கின்றனர். இதனால் வீட்டில் ஒருவிதமாக இறுக்கமான சூழ்நிலை ஏற்படுகிறது. ஒரே ஒரு நாள் டேட்டா இல்லை என்றாலும் மாணவர்கள் பைத்தியம் பிடித்தது போன்று இருக்கின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து இதனை தடை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : homes ,Chinese ,Parents ,Puppy Chinese , Silent gun noise, paralyzed homes - crying psychologically disturbing, Free Fire, Puppy Chinese game,Parents request, ban
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...