×

ஊரடங்கு தளர்வுக்கு பின் அரசு பஸ்கள் இயக்கம் கூடுதல் வசூலுடன் வாங்கப்பா... அதிகாரிகள் கறார்...

*  புறநகர் பேருந்தில் பயணிகள் திணிப்பு
*  கெடுபிடியால் டிரைவர், நடத்துனர்களுக்கு மனஉளைச்சல்


ஊரடங்கு தளர்வுக்கு பின் போக்குவரத்து மீண்டும் துவங்கி உள்ளது. இந்நிலையில் அரசு பஸ்சில் கூடுதல் வசூலை அதிகரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டதால் டிரைவர்கள், கண்டக்டர்கள் மனஉளைச்சலில் உள்ளனர். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நடுத்தர, சாமானிய மக்கள் என அனைவரும் விழிபிதுங்கி செய்வதறியாது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றனர். ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகள் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களையும் விட்டு வைக்கவில்லை. கும்பகோணம் கோட்டத்தின் கீழ் பெரம்பலுார், அரியலுார், ஜெயங்கொண்டம், உப்பிலியபுரம், துறையூர், ஜெயங்கொண்டம், லால்குடி, மண்ணச்சநல்லூர், துவாக்குடி, ராக்போர்ட், தீரன்நகர், கண்டோன்மெண்ட் மப்சல், புறநகர், மணப்பாறை, துவரங்குறிச்சி ஆகிய 14 டெப்போக்கள் திருச்சி மண்டலத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது. 1500 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் 3000 கண்டக்டர்கள், 3000 டிரைவர்கள் என மொத்தம் 6ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடுதழுவிய ஊரடங்கு அறிவிப்பால் எந்த அரசு பஸ்களும் இயக்கப்பட வில்லை. கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தமிழக அரசு 50 சதவீதம் அரசு பஸ்களை 60சதவீத பயணிகளுடன் இயக்க உரிய வழிமுறைகளை அறிவித்து அனுமதி அளித்தது. காலை 5 மணி முதல் இரவு 9மணி வரை மண்டலங்களாக வரையறுத்து அதற்கு உள்ளேயே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி மண்டலத்தில், 600 பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் முக்கியமாக நகர பகுதிகளில் மட்டும் பஸ்கள் இயங்கியது. கிராமப்புறங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இருந்த போதிலும் பொதுமக்கள் வருகை என்பது வெகுவாக குறைந்து காணப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

குறைவான பஸ்கள் காரணமாக ஒரிரு பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் அரசு அறிவித்த 60 சதவீத பயணிகள் என்பதை காற்றில் பறக்கவிட்டபடி, படிக்கட்டு பயணம் என்று சொல்லும் அளவிற்கு கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கண்டக்டர்கள் அந்த கூட்டத்தில் பயணிகளிடம் டிக்கெட் வசூல் செய்ய கொரோனா அச்சத்தில் பணியாற்றி வருகின்றனர். இதை கடந்து பணி முடித்து வசூலை ஒப்படைக்க சென்றால், அதிகாரிகள் வசூலை அதிகரிக்க வலியுறுத்துகின்றனர். இதனால் மனஉளைச்சலில் கண்டக்டர் மற்றும் டிரைவர்கள் இருக்கின்றனர். தமிழக அரசு ெகாரோனா பணிக்காலத்தில் முழுமையான ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்திருந்து.

இந்த அறிக்கையை காற்றில் பறக்கவிட்ட திருச்சி மண்டல போக்குவரத்து அதிகாரிகள், பணியாளர்கள் வருகை புரியாத காலத்திற்கு ஈஎல், எம்எல், சிஎல் ஆகிய விடுப்புகளில் இருந்து கழித்துள்ளதாகவும், அதில் பலருக்கு 4முதல் 5 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் மற்றும் கண்டக்டர்கள் அனைத்து சங்க பிரதிநிதிகளை அழைத்துக்கொண்டு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். சம்பள பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை கொடுப்பதாக உறுதி அளித்தும் இதுநாள் வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்க வில்லை. தற்போது ஜூன் மாதத்திற்கு சம்பளம் முழுமையாக கிடைக்குமா என ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம் பயணிகள் நகருக்குள் வருவதற்கு அச்சப்படுவதால் பயணிகள் வருகை குறைவாக உள்ளது. குறைந்த பஸ்கள் இயக்கப்படுவதால் வேறுவழியின்றி பஸ்களில் கூட்டமாக பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.

அரசு உத்தரவின் பேரில் 60 சதவீத பஸ்கள் இயக்கப்படுவதால் அனைத்து ஓட்டுநர் மற்றும் கண்டக்டர்களின் பணி அளவு பாதியாக உள்ளது. இதனால் இந்த மாதம் ஊதியம் முழுமையாக கிடைக்குமா என்கிற சந்தேகத்துடன் பணியாற்றி வருகின்றனர். மேலும் பணியாளர்களின் கூட்டுறவு சொசைட்டி, வங்கிகள் ஆகியவற்றிலிருந்து வாங்கிய கடன்களை அரசு அறிவிப்புகளை கடந்து சரியாக பிடித்து விடுகின்றனர்.
கடந்த மாதம் குறைத்து வழங்கப்பட்ட சம்பளத்தால் அவதிப்பட்ட ஓட்டுநர், கண்டக்டர்கள் இந்த மாதம் என்ன ஆகுமோ என அச்சத்தில் பணியாற்றுகின்றனர். பெயரளவுக்கு 60 சதவீத பயணிகளை ஏற்ற வேண்டும் என சொல்லும் அதிகாரிகள், வசூல் குறைந்தால் வசைபாடி வருவதாகவும், ஒவ்வொரு பஸ்களும் லிட்டருக்கு 6கி.மீ ஓட்ட வேண்டும் என டிரைவர்களை கட்டாயப்படுத்துகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மண்டலத்தில் உள்ள டவுன் பஸ்களில் பெரும்பாலும் புறநகர் பஸ்களாக இயக்கப்பட்டு இறுதியில் டவுன் பஸ்களாக இயக்கப்படுகிறது.இந்த பஸ்களில் எப்படி லிட்டருக்கு 6 கி.மீ கொண்டு வர முடியும். அதுவும் பழைய பஸ்களுக்கு 6 கி.மீ கேட்டு ஓட்டுநர்களை நிற்க வைத்து வசைபாடுவது தினம் தினம் மனஉளைச்சலுக்கு ஆளாக்குவதாக புலம்புகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கடை, நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது. மாஸ்க் போடாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் கூட்டம் கூடும் என ஆலயங்கள் திறக்கப்படவில்லை.ஆனால் அரசு பஸ்களில் மட்டும் சமூக இடைவெளி உத்தரவு என்பது காற்றில் பறக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அரசு பஸ்களில் கண்டக்டர்களிடம் அதிக வசூல்கேட்டு அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதால், கண்டக்டர்களும் அச்சத்தை மனதிற்குள் வைத்து பயணிகள் கூட்டத்துடன் பயணம் மேற்கொள்கின்றனர்.

இது குறித்து அரசு போக்குவரத்து கழக அனைத்து சங்க கூட்டு கூழுத் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சானிடைசர்கள், மாஸ்க் மட்டும் வைத்துக் கொண்டு ஒட்டுநர் மற்றும் கண்டக்டர்கள் மக்கள்சேவையாக பணியாற்றி வருகின்றோம். எந்தவித சம்பள பிடித்தமும் இல்லையென அரசு சொன்னது. ஆனால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களை சிஎல், எம்எல், இஎல் என ஊழியர்களுக்கு இருக்கும் விடுமுறைகளை அதிகாரிகள் பயன்படுத்தி கணக்கு காட்டுகின்றனர். இதனால் உடல்நிலை சரியில்லை என்றாலும், அவசர தேவைகளுக்கும் பணியாளர்கள் விடுமுறை எடுக்க முடியாது.

ஊரடங்கு காலத்தில் 60 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க அரசு வலியுறுத்தினால், வசூலை அதிகரித்து காட்ட வேண்டும் என ஒவ்வொரு நாளும் வசூல் பணத்தை அதிகாரிகளிடம் கொடுக்கும்போது கண்டக்டர், ஓட்டுநர்களுக்கு வகுப்பு எடுக்கின்றனர். டிரைவர்கள் லிட்டருக்கு 6 கி.மீ ஓட்டுங்கள் என திட்டுவதால் மனஉளைச்சலை தினமும் சந்தித்து வருகின்றனர். பயணிகள் கூட்டத்தில் பயணித்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது கொரோனா தொற்று ஏற்பட்டு அது குடும்பத்தை பாதித்து விடுமோ என்ற அச்ச உணர்வோடு தான் செல்ல வேண்டியுள்ளது. இது பற்றியெல்லாம் போக்குவரத்து கழக அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அதிக வசூல் கேட்பது குறித்தும், சம்பளம் பிடித்தம் செய்வது குறித்தும் உரிய விசாரணை நடத்தி ஓட்டுநர், கன்டக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

பஸ்சில் பயணிகள் கூட்டத்தில் பயணித்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது கொரோனா தொற்று ஏற்பட்டு அது குடும்பத்தை பாதித்து விடுமோ என்ற அச்ச உணர்வோடு தான் டிரைவர்கள், கண்டக்டர்கள் செல்கின்றனர்.

ஊரடங்கு காலத்தில் 60 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க அரசு வலியுறுத்தினால், வசூலை அதிகரித்து காட்ட வேண்டும் என ஒவ்வொரு நாளும் வசூல் பணத்தை அதிகாரிகளிடம் கொடுக்கும்போது கண்டக்டர், ஓட்டுநர்களுக்கு வகுப்பு எடுக்கப்படுகிறது.

போக்குவரத்து கழக மேலாளர் விளக்கம்...
திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாளர் ராஜ்மோகன் கூறுகையில், சம்பள பிடித்தம் என்பது உண்மைக்கு புறம்பானது. சமூக இடைவெளியுடன் தான் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதிக வசூல் கேட்டு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றார்.



Tags : curfew , Govt , buy buses , curfew
× RELATED ஹல்தாவணியில் ஊரடங்கு உத்தரவு அமல்