×

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு

* விவசாயிகளை புறக்கணித்துவிட்டு வியாபாரிகளிடம் கொள்முதல்
* குவிண்டாலுக்கு ரூ.100 கமிஷன் பெறுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. விவசாயிகளை புறக்கணித்துவிட்டு வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதோடு குவிண்டாலுக்கு ₹100 கமிஷன் பெறுவதாக விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், 2019-2020ம் ஆண்டு பயிர் பருவத்துக்கான நேரடி நெல் கொள்முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இடைத்தரகர்களால் ஏற்படும் இழப்பை தவிர்ப்பதற்காகவும், கூடுதல் விலை வழங்கவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலைங்களில் கொள்முதல் செய்யப்படும் ‘ஏ கிரேடு’ நெல் ஒரு குவிண்டால் (100கிலோ) ₹1,905க்கும், சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.1,865க்கும் விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், அணுக்குமலை, செய்யாறு, தூசி, பிரம்மதேசம், பாராசூர், எலத்தூர், சேத்துப்பட்டு, எறையூர், தண்டராம்பட்டு, தச்சூர், மருதாடு, மல்லவாடி, சிறுநாத்தூர், கடலாடி, கீழ்கொடுங்காலூர், மழையூர் உள்ளிட்ட 32 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதுவரை மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், தண்ணீர் பற்றாக்குறையால் நெல் உற்பத்தி வெகுவாக குறைந்திருக்கிறது. குறிப்பாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட பகுதியில் உற்பத்தியானதைவிட அதிக அளவில் நெல் கொள்முதல் நடந்திருக்கிறது. அதிகாரிகளின் உடந்தையோடு, வியாபாரிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் நெல் வாங்கும் வியாபாரிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால், விவசாயிகள் நேரடியாக கொண்டுசெல்லும் நெல் தரம் இல்லை, பதர் இருக்கிறது, 2வது ரகம் என்று பல்வேறு காரணம் தெரிவித்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிராகரிக்கப்படுகிறதாம். ஆனால், வியாபாரிகள் லாரி லாரியாக கொண்டுவரும் நெல் மூட்டைகளை எந்தவித தர பரிசோதனையும் செய்யாமல், ஏ கிரேடு நெல் என்று விலை நிர்ணயம் செய்து வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளது.

விவசாயிகள் பெயரில் சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று விவசாயிகள் சந்தேகப்படுகின்றனர். எனவே, இதுவரை நடந்துள்ள நேரடி நெல் கொள்முதல் விவங்களை ஆய்வு செய்தால், பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய, ஒரு கிலோவுக்கு ₹1 வீதம், குவிண்டாலுக்கு ₹100 கமிஷன் பெறுகிறார்களாம். கமிஷன் தர மறுத்தால், தரமற்ற நெல் என திருப்பி அனுப்பிவிடுகின்றனர். வாகன வாடகை இழப்பு ஏற்படுவதை தவிர்க்க, விவசாயிகள் வேறு வழியின்றி கமிஷன் கொடுக்கும் நிலை ஏற்படுகிறது.

இது தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, 3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து வாங்கிய கமிஷன் தொகையை, பேச்சுவார்த்தை மூலம் அதிகாரிகள் திரும்பப் பெற்றுத்தந்தனர். ஆனாலும், இந்த அவல நிலை தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பெரும்பாலான இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் மூடி வருகின்றனர். நெல் வரத்து குறைந்துவிட்டதால் மூடப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

கமிஷன் வாங்கிய ஊழியர்கள் மீது நடவடிக்கை இல்லை
இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பலராமன் கூறியதாவது: வௌி மார்க்கெட்டில் விலை குறைவாக கிடைக்கிறது என்பதால்தான், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு செல்கிறோம். ஆனால், விவசாயிகள் கொண்டுசெல்லும் நெல், ஈரப்பதம், பதர் அதிகமாக இருக்கிறது, தரமில்லை என திருப்பிவிடுகின்றனர். ஆனால், வியாபாரிகளிடம் இருந்து மட்டும் எந்த பரிசோதனையும் இல்லாமல் நெல் கொள்முதல் செய்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு நெல் விளைச்சல் மிகவும் குறைவு. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்துள்ளனர்.

வியாபாரிகள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த நெல் மூட்டைகளை, தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்துள்ளனர்.மேலும், விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோவுக்கு ₹1 முதல் ₹1.25 வரை கமிஷன் வாங்கியுள்ளனர். எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுக்கு மட்டும் கமிஷன் தொகையை அதிகாரிகள் திரும்பப் பெற்றுத்தந்தனர். ஆனால், கமிஷன் வாங்கிய ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முன்னறிவிப்பு இல்லாமல் மூடிவிட்டனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார். விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய, ஒரு கிலோவுக்கு ₹1 வீதம், குவிண்டாலுக்கு ₹100 கமிஷன் பெறுகிறார்களாம்.


Tags : paddy procurement centers ,procurement centers ,Thiruvannamalai district ,Direct Paddy , Misuse, direct paddy procurement , Thiruvannamalai district
× RELATED லத்தூர் ஒன்றியத்தில் 3 அரசு நேரடி நெல்...