×

கொரோனா ஊரடங்கால் ஜிம்கள் மூடல் 60 சதவீதம் பேருக்கு தொப்பை அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

கோவை: ஊரடங்கு காரணமாக ஜிம்கள் மூடப்பட்டுள்ளதாலும், உடற்பயிற்சி செய்யாமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாலும் 60 சதவீதம் பேருக்கு தொப்பை அதிகரித்துள்ளது. தொப்பை அதிகரிப்பால் உடலில் பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது, ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு வீரர்கள் பயிற்சிகள் பெற தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை மாவட்டத்தில் பல உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே, கட்டுமஸ்தான உடலுடன் காட்சியளித்து வந்த ஆண்கள் பலர் தற்போது அதிக தொப்பையுடன் காட்சியளிக்க துவங்கியுள்ளனர். விளையாட்டு வீரர்களும் சரிவர பயிற்சிகள் மேற்கொள்வதில்லை என்பதால், அவர்களும் தொப்பையுடன் காணப்படுகின்றனர். ஊரடங்கு காரணமாக அதிக நேரம் தூக்கம், உடற்பயிற்சி, நடைபயிற்சி இல்லாமை, நீண்ட நேரம் டி.வி உள்ளிட்டவற்றில் முழ்கி கிடப்பது உள்ளிட்டவைதான் தற்போது பலரது வாழ்க்கை முறையாக உள்ளது.

இந்த மாற்றத்தின் காரணமாக 60 சதவீதம் பேருக்கு தொப்பை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தொப்பை அதிகரிப்பால் 40 முதல்  60 சதவீதம் பேருக்கு இதய பாதிப்பு ஏற்படுவதாகவும், கல்லீரல் மற்றும்  சிறுநீரக பிரச்னை ஏற்படும் எனவும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கோவை லட்சுமிநகர் ஜிம் மாஸ்டர் குமார் கூறியதாவது: உலகளவில் உடல் பருமன்,  தொப்பை குறைப்பது பெரிய சவாலான காரியமாக உள்ளது. இதற்காகத்தான் பலர்  ஜிம்மிற்கு வருகின்றனர். சம்மர் விடுமுறைகளில் கல்லூரிக்கு செல்லும் இளைஞர்கள்  பலர் ஜிம்மில் சேர ஆர்வம் காட்டுவார்கள். ஜிம் மூடப்பட்டுள்ளாதல்  இளைஞர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஜிம்மிற்கு செல்பவர்கள் பல  வழிமுறைகளை கடைப்பிப்பர். தொடர் உடற்பயிற்சி தொப்பையை குறைக்க உதவும். உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஜிம்மிற்கு வந்து உடற்பயிற்சி செய்து தொப்பையை குறைத்து கொண்டவர்கள், பலர் ஊரடங்கினால் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்வதை தவிர்த்ததால் மீண்டும் தொப்பை ஏற்பட்டுள்ளது. சிலர், என்ன சாப்பிட்டாலும் ஜிம்மிற்கு சென்றால் உடலை குறைத்து கொள்ளலாம் என இருப்பார்கள். அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜிம் மூடப்பட்டு இருப்பதால், சிகரெட், குடிப்பழக்கம் போன்றவற்றில் இருந்து மீண்டு வந்தவர்கள் பலர் மீண்டும் அதே பழக்கத்திற்கு சென்று விட்டனர். கன்ட்ரோலாக இல்லாததால் உடல் எடை அதிகரித்து தொப்பை ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்

பிரசாத் என்பவர் கூறுகையில், “எனக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வது பிடிக்கும். இதற்காக தினமும் ஜிம் சென்று வந்தேன். தற்போது ஊரடங்கால் ஜிம்-க்கு  செல்வது இல்லை. வீட்டில் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடியவில்லை. வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் சிலவற்றை ஊரடங்கின் ஆரம்ப காலத்தில் செய்தேன். ஆனால், அதனை தொடர்ந்து செய்ய முடியவில்லை.
வீட்டிலேயே இருந்ததாலும், சரிவர பயிற்சிகள் செய்ய முடியாத காரணத்தால் உடல் எடை கூடியது மட்டுமின்றி தொப்பையும் அதிகரித்துவிட்டது. மீண்டும் ஜிம் திறந்தால்தான் தொப்பையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள முடியும் என நினைக்கிறேன் என்றார்.

வீட்டின் மொட்டை  மாடியில் காலை மற்றும் மாலை நேரங்களில் 40 நீளம், 30 அடி அகலத்தில் எட்டுபோல் வரைந்து, அதில் 50 முறை சுற்றி வரலாம். இதனால், தொப்பை குறையும்.  மூச்சு பயிற்சியாகவும் இருக்கும். ஆக்சிஜன் அதிகளவில் கிடைக்கும். நோய்  எதிர்ப்பு சக்தி ஏற்படும். மேலும், காலை உணவை 7.30 மணி முதல் 8.30  மணிக்குள் முடித்துவிட வேண்டும். இதற்கு முன்பு சிறிய அளவிலான  உடற்பயிற்சிகள், யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம். குழந்தைகளை விளையாட விட  வேண்டும். எட்டு போடவும் வைக்கலாம். மதிய உணவு 1 மணி முதல் 2.15 மணிக்குள்,  இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். தொப்பை ஏற்படக்கூடாது என  நினைப்பவர்கள் மதிய உணவிற்கு பின் 3 மணி நேரம் எதையும் சாப்பிடக்கூடாது. இரவு உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பின் படுக்க செல்ல  வேண்டும் என்கிறார் டாக்டர் சடகோபன்.

இதய பாதிப்பு ஏற்படுமாம்
கோவை அரசு மருத்துவமனை டாக்டர் சடகோபன் கூறியதாவது: ஊரடங்கினால்  பலரின் வாழ்க்கை முறை மாறியுள்ளது. பள்ளிகள் தொடர் விடுமுறையால், குடும்ப  பெண்கள் காலையில் எழுந்து குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது, சமையல்  செய்வது உள்ளிட்ட பணிகள் செய்வது இல்லை. கொரோனாவால் ஆண்களும் வீட்டில்  முடங்கியுள்ளனர். குழந்தைகள் வெளியில் விளையாட செல்வதில்லை. பலர் வாக்கிங்  செய்யும் பழக்கத்தை நிறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து பல மாதங்கள் உடற்பயிற்சி  கூடங்களுக்கு சென்று கொண்டிருந்தவர்கள் அது மூடப்பட்டதால் பயிற்சிகள்  செய்வது இல்லை. இந்த மாற்றத்தினால் அவர்களின்  உடலிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெண்களின் உடல்பருமன் முன்பை விட  அதிகரித்துள்ளது. சாப்பிட்டவுடன் உடனடியாக தூங்குவதாலும், அதிக நேரம்  உறங்குவதாலும் தொப்பை அதிகரிக்கிறது. அதிகளவில் தொப்பை ஏற்படுவதால் 40  முதல் 60 சதவீதம் பேருக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது. தவிர, கல்லீரல்  பாதிப்பும், சிறுநீரக பிரச்னையும் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இணையதளம் மூலம் பயிற்சி
ஆண்கள், பெண்கள் என அனைவருமே தொப்பை  அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் உடலை ஆரோக்கியமாக  வைத்துக்கொள்ள செல்போன்களில் ஆப்களை டவுன்லோடு செய்து அதனை பார்த்து  ேஹாம்ஓர்க் செய்து தொப்பையை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர். ரெகுலராக ஜிம்மிற்கு வந்தவர்கள்  வீட்டில் இருந்து என்ன செய்து தங்களின் உடலை சீராக வைத்து கொள்ள முடியும்  என தெரியும். அதற்கான உடற்பயிற்சிகள் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு  இருக்கும். ஆனால், புதியதாக ஜிம்மில் சேர்ந்து தொப்பை குறைக்க வேண்டும் என நினைத்தவர்கள் வீட்டில் இருந்து எப்படி  உடற்பயிற்சிகள் செய்வது? என்பதை இணையதளம் மூலம் கண்டறிந்து அதனை தினமும்  செய்ய வேண்டும். உணவு கட்டுப்பாடும் அவசியம்.

Tags : curfew gyms ,Corona ,doctors , Corona curfew , closure 60 percent, belly increase, doctors warn
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...