×

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை,..கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கா?

சென்னை: அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீடித்தாலும், கடந்த 1-ம் தேதி முதல் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்பியது. காய்கறிக் கடைகள், மீன், இறைச்சிக்கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்தது. தினமும் கொத்துக் கொத்தாக நோயாளிகள் குவிந்தனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இந்த நான்கு மாவட்டங்களிலும் கடந்த 19-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் நேற்று முன்தினம் வரை 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து, தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு நேற்று முன் தினம் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம், தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக விவாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், பேருந்துகள் இயக்குவது உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனைக்கு பின் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மதுரை மற்றும் தேனியல் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது, காய்கறி,மளிகை, உள்ளிட்ட கடைகள் மதியம் 2 மணி வரை செயல்படும், ஓட்டல்கள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்கள் மட்டும் அனுமதிக்கப்படும். டீக்கடை, பேக்கரி, பெட்டிக்கடை ஆகியன திறக்க அனுமதியில்லை. எனவே மற்ற கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Tags : Palanisamy ,district administrators , All District Collectors, Chief Palanisamy, Full Curfew
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...