×

பழைய மாமல்லபுரம் புறவழிச்சாலையில் உயர் கோபுர மின் கம்பங்களை அகற்றாமல் நடக்கும் சாலை பணி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

திருப்போரூர்: பழைய மாமல்லபுரம் புறவழிச்சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமலேயே, சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சிறுசேரி மென்பொருள் பூங்காவில் இருந்து பூஞ்சேரி வரை உள்ள நான்கு வழிப்பாதையில் படூர், கேளம்பாக்கம் இடையே ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் பகுதியில் ஒரு புறவழிச்சாலையும் அமைக்கப்படுகிறது. படூர் - கேளம்பாக்கம் பகுதியில் அமைக்கப்படும் புறவழிச்சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதில், திருப்போரூர் பகுதியில் அமைக்கப்படும் புறவழிச்சாலைப் பணிகள், கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வேகமாக நடந்து வருகிறது.

ஆனால், திருப்போரூர் பகுதியில் அமைக்கப்படும் புறவழிச்சாலையின் குறுக்கே உயர் அழுத்த மின் கம்பிகளை எடுத்துச் செல்லும் உயர் கோபுர மின் கம்பங்கள் உள்ளன. இந்த உயர் கோபுர மின்கம்பங்களை அகற்றுவதற்கு மின் வாரிய நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத்துறை அனுமதி, கேட்டு அதற்காக இடமாற்றக் கட்டணத்தையும் செலுத்தி விட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக மின் கம்பங்களை அகற்றி இடமாற்றம் செய்யும் பணிகள் நடக்கவில்லை. இதற்கிடையில், சாலைப்பணியை டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், ராட்சத மின்கம்பங்களை அகற்றாமலேயே சாலைகளை அமைக்கும் பணியை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

உயர் கோபுர மின் கம்பங்களை இடமாற்றம் செய்ததும், அந்த இடத்தில் உள்ள பழைய மின் கம்பத்தை அகற்றி மீண்டும் புதிய சாலை அமைக்கப்படும் என சாலை போடும் நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனாலும், சாலை அமைக்கும் பணிக்காக தார், ஜல்லிக்கற்கள், சவுடு மண், தண்ணீர் மற்றும் தளவாட பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் இந்த ராட்சத மின் கம்பங்களில் மோதி விபத்தை சந்திக்கும் ஆபத்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, உயர் கோபுர மின் கம்பங்களை இடம் மாற்றம் செய்த பிறகே, சாலைப்பணியை தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

Tags : Road ,Community activists ,roadway ,Mamallapuram ,mamallapuram road , Old Mamallapuram Highway, High Tower Power Pole, Road Work
× RELATED அனுமதியின்றி நடப்பட்ட பாஜ கொடிகம்பம் அகற்றம்: கட்சியினர் மறியல்