×

ஆன்லைன் வகுப்பு பிரச்னை; அரசு கண் மருத்துவமனை பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆன்லைன் வகுப்புகளை இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடத்த தடை விதிக்க கோரிய வழக்கில் அரசு கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த விமல்மோகன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா பாதிப்பில் இருந்து மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வி என்ற பெயரில் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. இது மாணவர்களுக்கு மன உளைச்சலையும், உடல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான மொபைல் போன், லேப்டாப் போன்ற கருவிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக மொபைல் போன்களையும், லேப் டாப்களையும் பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் வகுப்புகள் காலை முதல் மாலை ஆறு மணி நேரம் வரை நடக்கிறது. இதனால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்புகளை நடத்த கூடாது என உத்தரவிட வேண்டும்.

மொபைல் போன்களை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண் மருத்துவ நிபுணர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளால், கண்களின் விழி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மேலும் மன அழுத்தம் ஏற்படும் என்றும் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளையும் சுட்டிக்காட்டினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து சென்னை அரசு கண் மருத்துவமனை டீன் வருகிற 25ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Eye Hospital Response Icort Directive ,Government Eye Hospital ,Icort , Online Class Problem, Government Eye Hospital, Icort
× RELATED ஆன்லைன் வகுப்பு பிரச்சனையில் இரு...