×

கொரோனா தொற்று ஆயிரத்தை நெருங்கியது; மதுரையில் ஒரு வார முழு ஊரடங்கு அமல்

* 14 சோதனைச் சாவடிகள் அமைப்பு
* இ-பாஸ் அனுமதி ரத்து

மதுரை: மதுரையில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது. நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து, மதுரையில் ஜூன் 30 வரையிலான 7 நாட்கள் முழு ஊரடங்கு நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது. தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடுகிறது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த வாரம் முதல் மீண்டும் முழு ஊரடங்கு  அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. கடந்த 10 நாட்களாக மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை கணசமான அளவுக்கு அதிகரித்தது. தற்போது மதுரை மாவட்டத்தில் 988 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மக்களிடையே பெரும்  அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மதுரையிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நேற்று  நள்ளிரவு முதல் அமலாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு  12 மணி முதல் இந்த முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. வரும் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை வரை முழு  ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 28) ‘தீவிர ஊரடங்கு’ அமல்படுத்தப்படுகிறது. மதுரையில் நேற்று  கலெக்டர் வினய் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை மாவட்டத்திற்கு சென்னை  மற்றும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து இதுவரை 37 ஆயிரம் பேர்  வந்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும், கடந்த 15ம் தேதி வரை 6 ஆயிரம்  பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று  உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு கடுமையாக  அமல்படுத்தப்படும். ஊரடங்கு பகுதியில் உள்ள முக்கியமான புறநகரில் 8 சோதனைச்சாவடிகளும், நகர் பகுதியில் 6 சோதனைச்சாவடிகளும் என மொத்தம் 14 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.ஊரடங்கு பகுதியில், பஸ்  போக்குவரத்து முற்றிலும் இருக்காது. ஆட்டோ, டாக்ஸிக்கள் செல்ல அனுமதி இல்லை. ஊரடங்கு பகுதியில், பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை திறக்க அனுமதி  உண்டு. டாஸ்மாக் உட்பட அத்தியாவசியம் இல்லாத கடைகள் திறக்க அனுமதி இல்லை. அதேபோன்று எந்த மாவட்டத்திற்குள் இருந்தும், மதுரைக்குள் வரவும் இ-பாஸ் அனுமதி இல்லை. மருத்துவ  சிகிச்சைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தேனியில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பிறப்பித்த உத்தரவு: பெரியகுளம் நகராட்சியை தொடர்ந்து, தேனி மாவட்ட பிற நகராட்சிகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கில் மேலும், சில கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. காய்கறி, பழங்கள், மளிகைக்கடைகள், பெட்ரோல் பங்குகள், காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் டீக்கடைகள், பேக்கரிகள் திறக்க அனுமதி இல்லை.


Tags : Madurai , Corona infection, Madurai, full curfew, Amal
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...