×

கொரோனா சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட முதியவரை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் புகார்

ஆலந்தூர்: ஆலந்தூர் முத்தையா ரெட்டி தெருவை சேர்ந்த 72 வயது முதியவருக்கு, கடந்த 11ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆலந்தூர் 161வது வார்டு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் இந்த முதியவரை மருத்துவ சிகிச்சைக்காக  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி, ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். ஆனால், 13 நாட்களான பிறகும் முதியவர் குறித்த எந்த தகவலையும் உறவினர்களுக்கு சுகாதாரத்துறையினர் தெரிவிக்கவில்லை. முதியவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது உடன் இருந்த பரங்கிமலை போலீசாரிடம் கேட்டபோது, நோயாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவதுதான் எங்கள் வேலை. மற்றபடி எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது, என கூறியுள்ளனர். இதையடுத்து உறவினர்கள் ராஜிவ்காந்தி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று தேடினர்.

இறுதியில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று கேட்டபோதும் முதியவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, முதிவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர், மருத்துவ சிகிச்சைக்காக சுகாதாரத்துறையினரால் அழைத்து செல்லப்பட்ட முதியவரை கண்டுபிடித்து தரும்படி, நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், முதியவரின் புகைப்படத்தை வைத்து, அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், முதியவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 3 நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்பட்டது தெரியவந்தது. அதன்பின்னர் அவர் எங்கு சென்றார்?, என்ன ஆனார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Relatives ,Corona , Corona treatment, elderly, relatives complainv
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...