×

முந்தைய பணிக்காலத்தில் பாதியை கணக்கிட்டு தலையாரிகளுக்கு ஓய்வூதியம்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தலையாரிகளின் பணி நிரந்தரத்திற்கு முந்தைய பணிக்காலத்தில் பாதியை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தர விட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் தலையாரி, வெட்டியான்களாக பணியாற்றியவர்களில் கடந்த 1995ல் கிராம உதவியாளர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்குரிய மொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு ஓய்வூதியம் கோரினர். இதுதொடர்பான வழக்கில், முந்தைய பணிக்காலத்தில் 50 சதவீதத்தையும் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. ஆனாலும், நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

எனவே, பணி நிரந்தரம் செய்வதற்கு முந்தைய பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதிய கணக்கில் சேர்க்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதேபோல், பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராமானோர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் முகம்மதுமொய்தீன் வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘‘தலையாரிகள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து அவர்களது பணிக்காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மனுதாரர்கள் பணி நிரந்தரம் செய்வதற்கு முந்தைய பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதிய கணக்கில் சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.


Tags : headmasters ,Govt ,pension headmasters ,Icort , Previous work, pension, government, iCord
× RELATED புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய...