×

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகனின் பரிதாப முடிவு; சிறையில் அடைக்கப்பட்ட 2 வியாபாரிகள் அடுத்தடுத்து சாவு: 4 போலீசார் சஸ்பெண்ட்

* போலீசார் தாக்கியதே காரணம் என புகார்
* 7 மணி நேரம் மறியல் போராட்டம்

சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (58). சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் மரக்கடை நடத்தி வந்தார். இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவர், இதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த 18ம் தேதி இரவு 8 மணியளவில் ஜெயராஜ், மரக்கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. அப்போது ரோந்து வந்த சாத்தான்குளம் எஸ்ஐ பாலகிருஷ்ணன் அவரை எச்சரித்துள்ளார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து எஸ்ஐ மற்றும் போலீசார் சென்று விட்டனர்.

 ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர்  போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஏட்டு முருகன் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெயராஜை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதையறிந்த மகன் பென்னிக்ஸ், தந்தையை தேடி காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு  தந்தை, மகனை போலீசார் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அவர்களை 20ம் தேதி சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி  கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம்  இரவு 7.45 மணிக்கு கோவில்பட்டி சிறையில் இருந்த பென்னிக்ஸ், நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தசிறிது நேரத்தில் பென்னிக்ஸ் உயிரிழந்தார். இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பென்னிக்சின் தந்தை ஜெயராஜூம் நேற்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார். சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது சாத்தான்குளம், பேய்க்குளம் வட்டார வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காலை 8 மணியளவில் சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் அருகே திரண்ட வியாபாரிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் தாக்கியதால் தான் இருவரும் இறந்துள்ளனர்.  எனவே சாத்தான் குளம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர். மதியம் 2 மணியளவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்பி அருண் பாலகோபாலன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அழைத்து சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தினர். அதில் இந்த சம்பவம் தொடர்பாக 2 எஸ்ஐக்கள், தலைமை காவலர் முருகன், போலீசார் முத்துராஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்படுவர் எனவும், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 போலீசாரும் பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும் கலெக்டர் உறுதி அளித்தார்.

7 மணி நேரத்துக்கு பின்  மாலை 3 மணிக்கு பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இருவரது உடலையும், பாளை அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி பி.புகழேந்தி உத்தரவிட்டுள்ளார். பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
2 வியாபாரிகள் சாவு குறித்து தாமாக முன்வந்து விசாரித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி  துரை ஜெயச்சந்திரன், உள்துறை செயலாளர் மற்றும் சிறைத்துறை ஏடிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் விசாரணை செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதேேபால, மாநில மனித உரிமை ஆணையத்தின் டிஜிபி விசாரணை செய்து காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளுடன் 8 வாரத்திற்குள் விரிவான அறிக்கையை ஆணையத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியதாவது: போலீஸ் தாக்கியதில் வியாபாரிகள் இறந்ததை கண்டித்து இன்று (24ம் தேதி) ஒரு நாள் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு நடத்த உள்ளனர் என்றனர்.

போலீஸ் மீது கொலை வழக்கு: மனைவி கதறல்
இதுகுறித்து ஜெயராஜின் மனைவி செல்வராணி கூறியதாவது, எனது கணவவரை ஜீப்பில் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையறிந்த எனது மகன் போலீஸ் நிலையத்திற்கு சென்ற போது, அங்கு எனது கணவரை போலீசார் தாக்கியதை தடுத்துள்ளான். இதில் ஆத்திரமடைந்த போலீசார் எனது கணவரையும் மகனையும் மிருகத்தனமாக தாக்கியதுடன், ஆசனவாயில் லத்தியை சொருகி தாக்கியுள்ளனர். இதனால் தான் அவர்கள் இருவரும் உயரிழந்துள்ளனர். அவர்கள் இருவர் இறப்புக்கும் சாத்தான்குளம் போலீசார் தான் காரணம். அவர்கள் மீது கொலை வழக்குபதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : prisoners ,Satan , Sathankulam, father, son, prison, merchants, 4 cops suspended
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ