×

கொலைகார வைரசுக்கு எதிரான போரில் உலகின் மருந்தகம் இந்தியா: 133 நாடுகளுக்கு உதவி

கொரோனாவுக்கு எதிரான போரில், உலகின் மருந்தகமாக இந்தியா விளங்குவதாக உலக நாடுகள் பாராட்டி உள்ளன. கொரோனா வைரஸ் உலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடமாட்டார்களா என உலக மக்கள் ஏங்க ஆரம்பித்துள்ளனர். ஒரு வைரசால் இதுவரை ஏற்படாத அளவுக்கான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் கொரோனா ஏற்படுத்தி விட்டது. இப்படிப்பட்ட கொலைகார கொரோனாவுக்கு எதிராக உலகமே எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கிறது. இதில், உலகின் ஆபத்பாந்தவனாக இந்தியா திகழ்கிறது. இதுவரை கொரோனாவை எதிர்த்து போராட கிட்டத்தட்ட முழு உலகிற்கும், அதாவது 133 நாடுகளுக்கு இந்தியா மருந்து கொடுத்து உதவி உள்ளது.

இந்தியாவே கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட, பிற நாடுகளுக்கு மனிதாபிமானத்துடன் உதவி வருகிறது. அது மட்டுமின்றி, மருத்துவ உலகமே இந்தியாவை அதிகம் சார்ந்துள்ளது. எந்த மருந்தையும் உயர் தரத்திலும், மருத்துவ உபகரணங்களை மலிவு விலையிலும் தயாரிப்பதில் இந்தியா ஆழமான அனுபவத்தை பெற்றுள்ளது. உலகின் ஏழை நாடுகளும் வாங்கக் கூடியதான மருத்துவ உபகரணங்களை இந்தியாவைத் தவிர வேறெந்த நாடாலும் விலை குறைவானதாகவும், தரமானதாகவும் தயாரிக்க முடியாத நிலை உள்ளது. மருந்து உற்பத்தியிலும் இந்தியா முன்னோடி நாடாக திகழ்கிறது. உலகிலேயே பொதுவான மருந்துகளை அதிகளவில் தயாரிக்கும் நாடு இந்தியா.

அதாவது, உலக பாரம்பரிய மருந்து உற்பத்தியில் 20 சதவீதத்தை இந்தியா தயாரிக்கிறது. தடுப்பூசிகளுக்கான உலகளாவிய தேவையில் 62 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்கிறது. இந்தியாவின் இந்த ஆழ்ந்த அனுபவமும், பரந்த மனப்பான்மையும் கொரோனா மருந்து கண்டுபிடிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக உலக நாடுகள் எண்ணுகின்றன. கொரோனா மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியாவின் ஆற்றல்மிக்க நிபுணர்கள் பல நாடுகளுக்கு உதவி செய்கின்றனர். மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அதை மலிவு விலையில் தயாரிப்பதும், உலகின் அனைத்து நாடுகளும் பெறுவதிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.

அந்த வகையில், கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா உலகின் மருந்தகமாக திகழ்வதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் விளாடிமிர் நோரோவ் பாராட்டி உள்ளார்.சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பில், சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்க்கப்பட்டன. ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே இதன் உறுப்பினர்களாக உள்ளன.  ஒரு அமைப்பு பாராட்டியதில் இருந்தே மருத்துவ துறையில் இந்தியாவின் மகத்தான பங்களிப்பை அறியலாம்.


Tags : World ,war ,countries ,India , Killing virus, pharmacy, india, help
× RELATED பொறுமைக்கு கிடைத்த உலக சாதனை விருது!