×

பிரான்ஸ், ஜப்பான், குவைத், துபாயில் தவித்த 652 இந்தியர்கள் சென்னை திரும்பினர்: 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

சென்னை:  பிரான்ஸ், ஜப்பான், குவைத் மற்றும் துபாய் நாடுகளில் சிக்கித் தவித்த 652  இந்தியர்கள் 4 ஏர் இந்தியா சிறப்பு விமானங்களில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். லண்டனிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. அதில் 46 பெண்கள் உட்பட 154 இந்தியர்கள் வந்தனர். இவர்கள், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்ததும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 3 பேர் இலவச தங்குமிடமான மேலக்கோட்டையூர் தனியார் பல்கலைக்கும், 151 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான சென்னை நகரில் உள்ள ஓட்டல்களுக்கும் அனுப்பப்பட்டனர்.

இதுபோல, நள்ளிரவு 12.30 மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து ஏர் இந்தியா மீட்பு விமானம் வந்தது. அதில் 39 பெண்கள், 11 சிறுவர்கள் உட்பட 148 பேர் இருந்தனர். அனைவரும் மருத்துவ பரிசோதனை முடிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 13 பேர் மேலக்கோட்டையூர் தனியார் பல்கலைக்கும், 134 பேர் சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கும், ஆந்திராவை சேர்ந்த ஒருவர் நெல்லூருக்கும் அனுப்பப்பட்டனர். மேலும், நேற்று முன்தினம்  இரவு 11 மணிக்கு குவைத்திலிருந்து ஏர் இந்தியா மீட்பு விமானத்தில் 32 பெண்கள், 9 சிறுவர்கள் உட்பட 175 இந்தியர்கள் வந்தனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

103 பேர் மேலக்கோட்டையூர் பல்கலைக்கும், 72 ேபர் சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கும் அனுப்பப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை 6 மணிக்கு துபாயிலிருந்து தனியார்  மீட்பு விமானம் சென்னை வந்தது. அதில் 175 இந்தியர்கள் வந்தனர். அனைவரும் துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். இவர்களை அந்த நிறுவனமே தனி விமானத்தில் அழைத்து வந்துள்ளது. இவர்களுக்கு விமானநிலையத்தில்  இலவச மருத்துவ பரிசோதனையும், இலவச 14 நாட்கள் தனிமைப்படுத்தும் இடங்களும் கிடையாது. அதனால் அவர்களுக்கு குடியுரிமை, சுங்கச் சோதனைகள் முடிந்ததும் தனி பஸ்களில் ஏற்றி சென்னை நகரில் உள்ள ஓட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்த அழைத்து சென்றனர். அவர்கள் தங்கியுள்ள ஓட்டல்களுக்கு தனியார் மருத்துவ குழுவினர் சென்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பில் மருத்துவ பரிசோதனை செய்வார்கள் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான பயணிகள் 2 பேருக்கு கொரோனா
சென்னையில் கடந்த மாதம் 25ம் தேதியிலிருந்து நேற்று வரை 46,968 விமான பயணிகளுக்கு நடத்திய சோதனைகளில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், நேற்று புதிதாக 2 பயணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. வெளிநாட்டிலிருந்து மீட்பு விமானங்களில் கடந்த மாதம் 9ம் தேதியிலிருந்து  நேற்று வரை வந்த 8,412 பயணிகளுக்கு சோதனை நடத்தியதில் இதுவரை 99 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னை விமான நிலையம் உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களில் இதுவரை 154  பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Indians ,France ,Chennai ,Japan ,Kuwait ,Dubai , France, Japan, Kuwait, Dubai, Indians, returned to Chennai
× RELATED சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் : பிளே ஆஃப்...