×

காங். செயற்குழு கூட்டத்தில் சோனியா விளாசல்; எல்லை பிரச்சனைக்கு பாஜவின் தவறான நிர்வாகமே காரணம்: கொரோனாவை கையாள்வதிலும் படுதோல்வி என குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘எல்லையில் சீனா உடனான மோதலுக்கு பாஜ அரசின் தவறான நிர்வாகமும், தவறான கொள்கைகளுமே காரணம்,’ என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேற்று நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல், குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், இந்திய-சீனா எல்லை பிரச்னை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கொரோனா வைரஸ் பரவலை மத்திய அரசு கையாளும் விதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன. இதில், கட்சியின் தலைவர் சோனியா பேசியதாவது: துரதிருஷ்டங்கள் தனித்தனியாக வரவில்லை. நாடு மோசமான பொருளாதார நெருக்கடியாலும், பயங்கரமான கொரோனா தொற்று நோயாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எல்லையில் இந்தியா-  சீனா மோதலால் நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்த ஒவ்வொரு நெருக்கடிக்கும் மத்தியில் ஆளும் பாஜ அரசின் தவறான நிர்வாகமும், அதன் தவறான கொள்கைகளுமே காரணம். எல்லை விவகாரத்தில் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை தெளிவாக யூகிக்க முடியவில்லை. ஆனால், நமது பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வெளிப்படையாக தெரிவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மறுக்க முடியாத உண்மை என்னவெனில், கடந்த மே 5ம் தேதி சீன வீரர்கள் நம்முடைய எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கிலும், பாங்காங்க் த்ரோ ஏரிப் பகுதியிலும் அத்துமீறி நுழைந்துள்ளனர். ஆனால், இதை மத்திய அரசு மறுக்கிறது. அதன்பின் சூழல் மோசமாகியதால் கடந்த 15-16ம் தேதிகளில் இரு ராணுவத்துக்கும் இடையே மோதல் நடந்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அமைதியும், நிலைத்தன்மையும் மீண்டும் திரும்ப, தேச நலனுக்குரிய கொள்கைகளின் வழிகாட்டல்படி நடக்க மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

எல்லைப் பிரச்னையை நாங்கள் உன்னிப்பாகத் தொடர்ந்து கண்காணிப்போம். இப்பிரச்னையில் முதலில், மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் காங்கிரஸ் முழு ஆதரவை வழங்கிய போதிலும், மத்திய அரசு நிலைமையை தவறாக கையாண்டுள்ளதாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. எல்லையில் உள்ள நெருக்கடி, உறுதியாகக் கையாளப்படாவிட்டால் ஒரு கடுமையாக நிலைமைக்கு வழிவகுக்கும். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் நடவடிக்கைகளை மோடி அரசு தவறாக கையாண்டு விட்டது, வரலாற்றில் பேரழிவு தரக்கூடிய தோல்வியாக இது பதிவு செய்யப்படும். அரசிடம் போதுமான மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது அப்பட்டமாகி உள்ளது. கொரோனா பரவல் தீவிரமானதும், சுமையை மாநில அரசுகள் மீது மத்திய அரசு சுமத்திவிட்டது, ஆனால், எந்தவிதமான நிதியும் அளிக்கவில்லை.

மக்கள் தங்களைத் தாங்களே வைரசில் இருந்து தற்காத்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் பிரதமர் மோடி, பல வாக்குறுதி அளித்தாலும், கொரோனா தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரசை தேவையான தைரியத்துடனும், திறனுடனும் மத்திய அரசு கையாளவில்லை. ஊரடங்கால் பொருளாதார சூழல் மோசமடைந்துள்ளது. பொருளாதாரத்தை சீரமைக்க வல்லுநர்கள் அளிக்கும் நல்ல அறிவுரைகளை மோடி அரசு ஏற்க மறுக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில் மக்கள் கைகளில் நேரடியாக பணத்தை வழங்க வேண்டும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை அழிவிலிருந்து காத்திட வேண்டும். அவைகளுக்கு தேவையான கடனுதவி வழங்கப்பட வேண்டும். ஆனால் ஜிடிபியில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே மத்திய அரசு நிதித்தொகுப்பை அறிவித்துள்ளது. 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது.

அதிகரித்து வரும் வேலையின்மை, குறைந்துவரும் வருமானம், கூலி, முதலீட்டு குறைவு ஆகியவை அச்சம் தருகின்றன. இதிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் ஆகும். மத்திய அரசு தனது தவறை உணர்ந்து திருத்திக்கொண்டு, வலிமையான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால்தான் மீள முடியும். இவ்வாறு சோனியா கூறினார். கூட்டத்தில், சீன ராணுவத்துடனான மோதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இரக்கமில்லையா?
சோனியா மேலும் பேசுகையில், ‘‘கொரோனா பாதிப்பும், பொருளாதார நெருக்கடியும் மக்களை வாட்டி வதைக்கும் நிலையிலும், சிறிதும் இரக்கமில்லாமல் பாஜ அரசு தொடர்ந்து 17 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதிலும் கூட அதற்கான பலனை மக்களுக்கு தராமல் வஞ்சித்து விட்டது,’’ என்றார்.


Tags : Sonia Varasal ,Corona ,executive committee meeting ,The Baja ,meeting ,Executive Committee , Cong. Executive, Sonia, border problem, corona, fiasco
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...