×

லடாக் எல்லையில் இருந்து இந்திய, சீன படைகள் வாபஸ் ஆகின்றன: 14 மணி நேர பேச்சில் முடிவு

புதுடெல்லி: பதற்றமான சூழல் நிலவும் கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்ட இந்திய, சீன படைகளை விலக்கிக் கொள்ள இரு தரப்பு ராணுவமும் ஒப்புக் கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடந்த 14 மணி நேர நீண்ட பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் பாங்காங்க் திசோ ஏரிப்பகுதி மற்றும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மே 5ம் தேதி இந்தியா, சீனா படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், லடாக் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த 6ம் தேதி இருதரப்பு லெப்டினென்ட் ஜெனரல்கள் தலைமையிலான பேச்சுவார்த்தையில், பரஸ்பர ஒத்துழைப்புடன் எல்லையில் பதற்றத்தை தணிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன்படி, மே 4ம் தேதிக்கு முந்தைய நிலைக்கு படைகளை விலக்கிக் கொள்ள இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.

இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், கடந்த 15-16ம் தேதிகளில் கல்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சீன தரப்பில் 43 வீரர்கள் பலி, காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், கிழக்கு லடாக் பிராந்தியத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் மீண்டும் இரு நாட்டு ராணுவமும் படைகளை குவிக்க பதற்றமான சூழல் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து 2ம் கட்டமாக லெப்டினென்ட் ஜெனரல்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் தொடங்கியது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகே சீன பகுதியில் உள்ள மோல்டா என்ற இடத்தில் நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை 14 மணி நேரம் நீடித்தது. இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலும், சீன தரப்பில் திபெத் ராணுவ மேஜர் ஜெனரல் லியு லின் தலைமையிலும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மீது சீன படையினர் நடத்திய திட்டமிட்ட தாக்குதலை கடுமையாக கண்டித்ததுடன், கிழக்கு லடாக்கில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் சீன படைகளை உடனடியாக திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது. அதோடு, படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில், இரு தரப்பினர் இடையே சுமூக ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. லடாக் பகுதியில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கிக் கொள்வதை இரு தரப்பும் நடைமுறை படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், லடாக் எல்லை பதற்றம் இனி தணியத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், லடாக், லே உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக, ராணுவ தளபதி நரவானே  2 நாள் பயணமாக நேற்று புறப்பட்டு சென்றார்.

சீன எல்லையில் பாலம் உடைந்தது
இந்தியா-சீனா எல்லையில் இருந்து 50 கிமீ தொலைவில் உள்ள உத்தரகாண்டின் பிதோராகர் மாவட்டத்தில், பெய்லி பாலம் நேற்று திடீரென உடைந்தது. கடந்த 2009ல் கட்டப்பட்ட 40 அடி நீள பாலத்தில், ஒரு லாரி, ஜேசிபி இயந்திரத்துடன் செல்லும் போது, பாரம் தாங்காமல் உடைந்து விழுந்தது. இதில் லாரி டிரைவரும், ஜேசிபி பணியாளரும் காயமடைந்தனர். 18 டன் எடையை மட்டுமே தாங்கும் திறன் கொண்ட இப்பாலத்தில் 26 டன் எடையுடன் லாரி சென்றதே விபத்துக்கு காரணம். இதனால், லாரி டிரைவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பாலம் இடிந்ததால் 15 எல்லைப்புற கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இனி புதிய பாலம் கட்ட குறைந்தபட்சம் 15 நாட்களாகும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Tags : troops ,border ,Ladakh ,Indian ,Chinese , Ladakh border, Indian and Chinese forces, withdrawal
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...