×

ஓ.பி.சி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மறுப்பது அடிப்படை உரிமை மீறலாகும்: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதம்

புதுடெல்லி: மருத்துவப் படிப்பில் அனைத்து இந்திய இடஒதுக்கீட்டில் இதரப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பது அடிப்படை உரிமை மீறலாகும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் வாதிடப்பட்டுள்ளது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கீதா தரப்பில் கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு அனைத்திந்திய இடஒதுக்கீட்டில் 27 சதவீதம் வழங்க வேண்டும். மேலும் இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் கொடுத்துள்ள மனு மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்த இடஒதுக்கீடு எம்.பி.பி.எஸ், எம்.டி மற்றும் பி.டி.எஸ் ஆகிய அனைத்திற்கும் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்த் நாத் தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜராஜன் தனது வாதத்தில், “தாழ்த்தப்பட்ட , பழங்குடியினர் பிரிவு மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி சேர்க்கையில் அகில இந்திய இடஒதுக்கீடு வழங்கும்போது, இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மட்டும் வழங்க மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமை மீறலாகும். குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், மத்திய அரசு அவர்களுக்கு தேவையான இடஒதுக்கீட்டை வழங்கி வருகிறது.

ஆனால் ஓ.பி.சி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மட்டும் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு காரணம் தெரிவித்து வருகிறது. இது ஏற்கக்கூடியதாக இல்லை. அதனால் இதரப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மருத்துவ இடஒதுக்கீட்டில் 27 சதவீதம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார். இதையடுத்து வழக்கு அடுத்த மாதம் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : violation ,Delhi High Court ,OBC Division , OBC Division, Reservation, Fundamental Rights, Delhi High Court
× RELATED திரிணாமுல் காங். எம்.பி. மகுவா மொய்த்ராவுக்கு எதிரான அவதூறு வழக்கு வாபஸ்..!