×

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் நாமக்கல்லில் ரூ25 கோடியில் கம்பிரஸ்ட் பயோ காஸ் தொழிற்சாலை: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் நாமக்கல்லில் ரூ25 கோடியில் நிறுவப்பட்டுள்ள கம்பிரஸ்ட் பயோ காஸ் தொழிற்சாலையின் உற்பத்தி பணிகளை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தும், மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எக்கு துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் டெல்லியில் இருந்தும் துவக்கி வைத்தனர். அப்போது முதல்வர் எடப்பாடி பேசியதாவது: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சார்பில் நாமக்கல்லில் ₹25 கோடி செலவில் கம்பிரஸ்ட் பயோ காஸ் உற்பத்தி பணிகளுக்கான இயந்திரத்தையும், நாமக்கல், சேலம், புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் ஆகிய இடங்களில் ஐந்து சிபிஜி சில்லறை விற்பனை நிலையங்களையும் துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் ஜெர்மனி நாட்டின் ஆயில் டாக்கிங் நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான ஐஓடி உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சேவைகள் நிறுவனம், நாமக்கல்லில் ரூ34 கோடி செலவில் அமைக்கப்பட்டு 2.4 மெகா வாட் திறன் கொண்ட பயோ காஸ் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் பயோ காஸ்லிருந்து கம்பிரஸ்ட் பயோ காஸ் தயாரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைக்கு ரூ25 கோடி செலவில் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த புதிய தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 15 டன் கம்பிரஸ்ட் பயோ காஸ் மற்றும் 20 டன் உயிர் உரங்கள் தயாரிக்கப்படும்.

தமிழ்நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவுதிறன் 15 ஆயிரத்து 876 மெகாவாட் ஆகும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் புதிய திட்டம்
முதல்வர் எடப்பாடி கூறும்போது,’ சென்னையில் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இரண்டு கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின் திட்டத்தினை சென்னையை சுற்றியுள்ள பகுதியில் தமிழ்நாடு
அரசால்  நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Chief Minister ,Indian Oil Company ,Compact Bio Gas Coal Factory ,Namakkal , Indian Oil Company, Namakkal, Compost Bio Gas Factory, Chief Edapadi
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...