×

ஜெயலலிதா நினைவிட பணிகளை ஜூலை 31க்குள் முடிக்க கெடு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகளை ஜூலை 31க்குள் முடிக்க கெடு விதித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், நினைவிட கட்டுமான பணிக்கு ₹50.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. கட்டுமான பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018 மே 7ம் தேதி அடிக்கல் நாட்டினார். அன்றைய தினத்தில் இருந்து இரவு, பகலாக கட்டுமான பணி நடந்து வருகிறது. குறிப்பாக, கருங்கல்லால் ஆன நடைபாதை, வாகன நிறுத்தம், அருங்காட்சியகம், அறிவு சார் மையம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், பீனிக்ஸ் பறவை தோற்றம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் வரை அமைக்கப்படுகிறது. இதற்காக, துபாயில் இருந்து கப்பல் மூலம் கட்டுமான பொருட்கள் வரவழைக்கப்பட்டன. இப்பணிகளில் தமிழகத்தில் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு முன் அனுபவம் இல்லை. இதனால், பீனிக்ஸ் பறவை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு துபாயில் இருந்து பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள், ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களை சேர்ந்த ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மூலம் சூப்பர் ஸ்டெக்சர் வடிவமைப்புடன் கூடிய பீனிக்ஸ் பறவை இறக்கை பொருத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது வரை ஒரு பகுதி மட்டுமே இறக்கை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இரண்டாவது பகுதி இறக்கை அமைக்கும் பணி இப்போதுதான் நடந்து வருகிறது.

இதற்கிடையே பீனிக்ஸ் பறவையின் முதுகு பகுதி கட்டிட பணிக்கு கட்டுமான பொருட்கள் துபாயில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த பீனிக்ஸ் பறவை இறக்கை அமைக்கும் பணி சவாலானது என்பதால் இப்பணிகள் மட்டுமே ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இப்பணிகளை வரும் ஜூலை 31ம் தேதிக்குள் முடிக்க முதல்வர் எடப்பாடி கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகனுக்கு உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் பறவை இறக்கை அமைக்கும் பணியை முடிப்பதில் சிக்கல் இருப்பதாலும், போதிய அனுபவம் இல்லாத சூழலிலும் இப்பணிகளை முடிக்க குறைந்தது 6 மாதம் வரை ஆக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் இப்பணிகளை அவசர, அவசரமாக முடித்தால் கட்டுமான பணிகள் தரமில்லாமல் போய் விடும் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

* ஜெயலலிதா நினைவிடம் அமைக்க ₹50.08 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
* கட்டுமான பணி 2018 மே 7ம் தேதி தொடங்கப்பட்டது.

Tags : Jayalalithaa , Jayalalithaa memorial mission, Government of Tamil Nadu
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...