×

3 பெண் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 37 போலீசாருக்கு கொரோனா: சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 937 ஆக உயர்வு

சென்னை: மூன்று பெண் இன்ஸ்பெக்டர்கள் உட்பட காவல் துறையில் 37 போலீசாருக்கு கொரோனா நேற்று உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 937 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும், கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் பெண் இன்ஸ்பெக்டர், சைதாப்பேட்டை குற்றப்பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் உட்பட நேற்று ஒரே நாளில் 37 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து 37 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐஐடி மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இவர்களுடன் பணியாற்றிய சக போலீசாரையும் தனிமைப்படுத்தினர். சென்னை காவல் துறையில் நேற்று வரை 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மாநகர காவல் துறையில் தொற்று தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கின் போது சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்ட போலீசார் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் காவலர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Tags : policemen ,Chennai ,inspectors , 3 Female Inspectors, 37 Police to Corona, Madras
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்