×

ராமேஸ்வரத்தில் இருந்து வரத்து குறைவு தென்மாவட்டங்களில் கருவாடு விலையேற்றம்: அசைவ பிரியர்கள் அவதி

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கருவாடு விலை அதிகரித்து வருவதால், அசைவ பிரியர்கள் திண்டாடி வருகின்றனர். ஒரு கிலோ சீலா கருவாடு ரூ. ஆயிரத்தை தொட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மீனுக்கு இணையாக கருவாடும் மக்கள் மத்தியில் விரும்பி சாப்பிடப்படுவதுண்டு. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் இதற்காகவே மீனை பிடித்து பதப்படுத்தி, காய வைத்து கருவடாக்கி விற்பனைக்கு அனுப்பி வைப்பர். நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள சிறு, சிறு வியாபாரிகள் பொதுவாக மேலப்பாளையம் சந்தைக்கு வரும் கருவாடுகளை வாங்கி அந்தந்த பகுதிகளில் விற்பனை செய்வதுண்டு. மேலப்பாளையம் சந்தை 4 மாதங்களாக பூட்டி கிடக்கும் சூழலில், நெல்லை கடலோர பகுதிகளில் இருந்தும் கருவாடு வரத்து தற்போது குறைந்துவிட்டது. நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு தற்ேபாது ராமேஸ்வரம், திருச்சி பகுதிகளில் இருந்தே கருவாடு கொண்டு வரப்படுகிறது. கயத்தாறில் இருந்து மொத்த வியாபாரிகள் அவற்றை கொள்முதல் செய்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். ராமேஸ்வரத்திலும் தேவைக்கேற்ப தற்போது கருவாடு கிடைப்பதில்லை. இதனால் அதன் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

குறிப்பாக சாலை கருவாடுகளின் விலை ஒரு கிலோ ரூ.300 வரை விற்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.100க்கு விற்றது. முறல் கருவாடுகளின் விலையும் ரூ.300 வரை சென்றுள்ளது. சாலை மீன்களின் விலையே கிலோ ரூ.120க்கு விற்கப்படும் நிலையில், கருவாடுகளின் விலை மும்மடங்கு உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சீலா கருவாடுகளின் விலை தற்பாது ரூ.ஆயிரத்தை தொட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு சீலா கருவாடுகளின் விலை ரூ.400 ஆக இருந்தது. தற்போது சீலா மீன்களின் விலையும் கிலோ ரூ.ஆயிரத்திற்கு விற்கப்படும் சூழலில், கருவாடுகளின் விலையும் ஒன்றாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் முன்பு கிலோ ரூ.220க்கு விற்கப்பட்ட மஞ்சப்பாறை கருவாடுகள், இப்போது கிலோ ரூ.800 ஆக உயர்ந்துள்ளது. நெத்திலி கருவாடுகளின் விலை ரூ.200லிருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கருவாடுகளின் விலைகளை விசாரிக்கும் வாடிக்கையாளர்கள், அதற்கு மீன் விலையே பரவாயில்லை எனக்கூறி, அதன்பக்கம் சென்றுவிடுகின்றனர். கருவாடு விலையேற்றம் அசைவ பிரியர்களை மட்டுமின்றி, சிறு, குறு வியாபாரிகளையும் அதிகம் பாதித்துள்ளது.

Tags : Rameswaram ,towns ,regions ,Southwestern ,Aviary Brewers , Rameswaram, Garuvadu, and immortal beings
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...