×

அரசு பேருந்தில் பயணம் செய்த தம்பதிக்கு கொரோனா உறுதி: சக பயணிகள் அலறியடித்து ஓட்டம்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த தம்பதிக்கு கொரோனா இருப்பதாக செல்போனில் தகவல் வந்ததால், சக பயணிகள் அலறியடித்து ஓடினர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வடலூர் அடுத்த ஆபத்தானபுரத்தை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவிற்காக காத்திருந்தனர். இந்நிலையில் பண்ருட்டியிலிருந்து சென்ற அரசு பேருந்து வடலூருக்கு நேற்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். ஆபத்தானபுரத்தை சேர்ந்த கணவன், மனைவி இருவரும் இந்த பேருந்தில் பயணம் செய்தனர். மேல்மாம்பட்டு என்ற இடத்தில் இவர்கள் பயணம் செய்த பேருந்து சென்று கொண்டிருந்தபோது, செல்போனில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி என்ற தகவல் கிடைத்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் பேருந்தை நிறுத்த கூறி கூச்சலிட்டனர். கொரோனா உறுதி செய்த தகவலை கூறி இறங்கி விட்டனர். இதனால் பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் பீதியில் அலறியடித்துகொண்டு பேருந்தை விட்டு இறங்கி ஓடினர். இந்த திடீர் சம்பவத்தால் ஓட்டுனரும், நடத்துனரும் செய்வதறியாமல் திகைத்தனர். தகவலின் பேரில் சுகாதாரத்துறையினர் விரைந்து வந்து இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனிடையே பேருந்தை டெப்போவிற்கு வெளியே நிறுத்தி கிருமிநாசினி தெளித்து உள்ளே அனுமதிக்கப்பட்டது.

மேலும் அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் இருவரையும் பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் மற்ற பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று உறுதியான கணவன், மனைவி இருவரும் பண்ருட்டியில் யாரை சந்தித்தனர், எங்கெங்கு சென்றனர் என்ற விபரத்தை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சிலர் பயத்தின் காரணமாக தாங்களாகவே சென்று கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

Tags : Corona ,Corona Promises Couple , State Bus, Couple, Corona
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...