×

தேனி மாவட்டத்தை சேர்ந்த 6 குழந்தை தொழிலாளர்கள் கேரளாவிலிருந்து மீட்பு

கூடலூர்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள ஒரு சிப்ஸ் கம்பெனியில் தமிழகத்ததைச் சேர்ந்த சிறுவர்கள் இரவு, பகலாக வேலை செய்வதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த மாதம் கேரள குழந்தைகள் நலவாரியத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து பத்தனம்திட்டா குழந்தைகள் நல அமைப்பினர் அங்கு சென்று சிறுவர்களை மீட்டனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த பாண்டியின் மகன்கள் பாண்டீஸ்வரன்(16) விக்னேஸ்வரன்(14), ஆண்டிபட்டி தாலுகா ராஜகோபாலன்பட்டி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த முனியாண்டியின் மகன் அழகர்சாமி (16), பெருமாள் மகன் அருண்குமார் (16), முனியாண்டி மகன் ராமர் (16) மற்றும் கடமலைக்குண்டு முனியாண்டி மகன் விக்னேஸ்வரன் (17) என்பது தெரியவந்தது.

இவர்களை சில மாதங்களுக்க முன்பு மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவர் வேலைக்காக அழைத்து சென்றது தெரிய வந்தது. சிறுவர்களை மீட்டு தரும்படி தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம், அவர்களது பெற்றோர் மனு கொடுத்தனர். இது தொடர்பாக கலெக்டர் உத்ததரவிட்டதையடுத்து, தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் பத்தனம்திட்டா குழந்தைகள் நல அமைப்பினரிடம் சிறுவர்கள் குறித்து விசாரித்தனர். சிறுவர்களுக்கு முறையாக கோவிட்-19 பரிசோதனை செய்து ஒப்படைக்கும்படி பத்தனம்திட்டா கலெக்டர் மற்றும் குழந்தைகள் நலக்குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிறுவர்களுக்கு முறையாக கோவிட்19 பரிசோதனை செய்து தனிமைப்படுத்திய பின்னர், நேற்று கேரளா குமுளி இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், மற்றும் குழந்தைகள் நலக்குழுவினர் தமிழக எல்லையான குமுளியில், தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார், உறுப்பினர்கள் நாகேந்திரன், பழனிச்சாமி, குழந்தைகள் நல பெரியகுளம் துணை மைய இயக்குநர் அனுஷ்யா, வருவாய்துறை டெப்டி தாசில்தார் கண்ணன், கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணி கொண்ட குழுவினரிடம் சிறுவர்களை ஒப்படைத்தனர்.

இது குறித்து தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார் கூறுகையில், ‘‘இந்த சிறுவர்கள் ஏஜண்ட் மூலம் கேரளாவுக்குச் சென்றுள்ளனர். தேனி கலெக்டரின் நடவடிக்கையால் சிறுவர்கள் 6 பேரையும் மீட்டுள்ளோம். கேரளாவில் தங்கி இருந்ததால் அவர்களை லோயர்கேம்பிலுள்ள தமிழக சுகாதாரத்துறையினர் சோதனை செய்து பின் தேனிக்கு கொண்டு செல்கிறோம். அங்கு கலெக்டர் மூலமாக அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்க உள்ளோம்’’ என்றார்.

Tags : child laborers ,Theni ,Kerala. 6 ,Kerala , Theni, Child Workers, Kerala, Rescue
× RELATED தெனி மாவட்டத்தில் மேலும் 308 பேருக்கு கொரோனா உறுதி