×

தேனியில் சமூக வலைதளங்களில் தீயாக பரவும் கொரோனா வதந்தி: மவுனம் சாதிக்கும் மாவட்ட நிர்வாகம்

தேனி: தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டு வருவதாக, சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனை மாவட்ட நிர்வாகம் மறுக்காமலும், உறுதிப்படுத்தாமலும் மவுனம் சாதிப்பதால், மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் எணணிக்கை மிக அதிகளவில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள கணக்குப்படி இன்று காலை வரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 236ஐ கடந்து விட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 36 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை பெரியகுளம், கம்பம், போடி பகுதிகளில் மிகவும் அதிகளவில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் எண்ணிக்கையை மறைக்கிறது. போலீஸ் துறையில் பணிபுரிபவர்களும், மருத்துவத்துறையில் பணிபுரிபவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது  குறித்த தவகல்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட மறுக்கிறது.

தேனி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுமே மிக மோசமான பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. சென்னையில் இருந்து வந்தவர்களே இத்தொற்று பரவலுக்கு காரணம். மாவட்ட நிர்வாகம் அவர்களை சோதனைச்சாவடியில் தடுக்காமல் அனுமதித்துள்ளது என அடுத்தடுத்து மாவட்ட நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல அதிகளவில் பதிவுகள் வருகின்றன. ஆனால் சமூக வளைதலங்களில் தகவல்கள் பரவுவது குறித்து அறிந்தும், மாவட்ட நிர்வாகம் இந்த தகவல்களை மறுக்காமலும், உறுதிப்பபடுத்தாமலும் மவுனம் சாதித்து வருகிறது. தவிர மாவட்டத்தின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு அமலாக உள்ளது. பத்திரப்பதிவுகள் நிறுத்தப்படும், டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்படும் என்ற தகவல்களும் வேகமாக பரவுகிறது.

இதனால் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், தினசரி கூலி வேலை செய்பவர்கள் என பலரும் கடும் அச்சத்தில் உள்ளனர். இன்னொரு முறை முழு ஊரடங்கு வந்தால் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து விடும் என ஏழை, எளிய மக்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். மறுபுறம் தென்மேற்கு பருவமழை காலம் என்பதல் சளி, காய்ச்சலும் அதிகரித்து வருகிறது. இது சாதாரண சளி, காய்ச்சலா அல்லது கொரோனா காய்ச்சலா என்ற சிக்கலும் எழுந்துள்ளது. இப்பிரச்னைகளுக்கு தெளிவாக விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : Corona ,district administration ,Theni , Theni, social websites, corona, gossip
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்