×

கொரோனா முழு ஊரடங்கு..! மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும்: டி.டி.வி தினகரன் கோரிக்கை

சென்னை: முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை பகுதி மக்களுக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழங்குவதைப் போல ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் மதுரையில் ஜூன் 24-ந் தேதி அதிகாலை முதல் ஜூன் 30-ந் தேதி வரை மீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா அதி உச்சமாக பரவுவதால் 12 நாட்கள் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனையடுத்து பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்தது. குறிப்பாக மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது. இதன் காரணமாக மதுரையிலும் இன்று நள்ளிரவு முதல் 7 நாள்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப் பகுதிகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ஊரகப் பகுதிகளிலும் முழு முடக்கம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும் என டி.டி.வி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை பகுதி மக்களுக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழங்குவதைப் போல ஆயிரம் ரூபாய்  நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். சென்னையைப் போல மக்களைக் கூட்டமாக சேர்க்காமல் அவரவர் வீடுகளுக்கே சென்று இந்த நிதியை வழங்கிட வேண்டும். மேலும் மதுரையில் ஊரடங்கு அமலாகும் இடங்களில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் கட்டணமில்லாமல் உணவு அளிப்பதற்கான நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Corona ,DDV Dinakaran ,Madurai People , Corona, Full Curfew, Madurai, DTV Dinakaran
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...