குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை, சாலை எந்த வசதியுமே இல்லாமல் தவிக்கும் இலங்கை அகதிகள் முகாம் மக்கள்: எட்டயபுரம் அருகே ஒரு பரிதாப கிராமம்

எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே உள்ள குளத்துள்வாய்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் குடிநீர், கழிப்பறை, நடைபாதை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாததால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.  இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 1990ம் ஆண்டு அகதிகளாக வந்த தமிழர்களை மத்திய அரசு தமிழகத்தில் பல இடங்களில் முகாம் அமைத்து தங்க வைத்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகாவில் தாப்பாத்தி, குளத்துள்வாய்பட்டி உள்ளிட்ட இடங்களில் முகாம் அமைத்து இலங்கை தமிழர்கள் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அரசு அவர்களுக்கு தற்காலிகமாக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது.

குளத்துள்வாய்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 1990ல் ஆரம்பத்தில் 250 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்காததால் அங்கிருந்த பெரும்பாலான குடும்பங்கள் தமிழகத்தில் உள்ள வேறு முகாம்களுக்கும், சிலர் இலங்கைக்கும் திரும்பி சென்றனர். தற்போது குளத்துள்வாய்பட்டி முகாமில் 35 குடும்பங்களை சேர்ந்த 114 பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் பெயின்டிங், கட்டுமானம் உள்ளிட்ட கூலிவேலைக்கு சென்று வருகின்றனர். ஆரம்பகாலம் முதல் தற்போது வரை அங்குள்ள முகாமில் குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு, சாலை என எந்த அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரப்படவில்லை.

முகாமிற்கு செல்லும் முகப்பில் உள்ள பாலம் 2015ம் ஆண்டு கட்டப்பட்டது. பெயருக்கு கட்டப்பட்டதால் கட்டிய ஓராண்டிலேயே பாலம் உடைந்து போனது. இருசக்கரவாகனம் மற்றும் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ள பாலத்தை சரிசெய்ய வலியுறுத்தி முகாம்வாசிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.அதே போன்று அங்குள்ள கழிப்பறை சுவற்றுக்கு ஆண்டு தோறும் வர்ணம் தீட்டப்படுகிறது. ஆனால் கழிப்பறையை பயன்படுத்த தேவையான தண்ணீர் வசதி இல்லை, இதனால் கழிப்பறை வெறும் காட்சி பொருளாகவே உள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்து தெருவிளக்கு இல்லை. ஆதிகால கிராமம் போல இரவானால் வெளியில் நடமாட முடியாதபடி இருள் சூழ்ந்து உள்ளது. அங்குள்ள குடிநீர் குழாயில் எப்போதாவது குடிநீர் வருகிறது. அந்த குழாய் உடைந்து சீர்படுத்தாமல் உள்ளதால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக தண்ணீர் வந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இப்படி குளத்துள்வாய்பட்டி அகதிகள் முகாமில் குடிநீர், கழிப்பறை, சாலை, தெருவிளக்கு என எந்த அடிப்படை வசதியும் முறையாக பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டதால் முகாம் வாசிகள் வேற்றுகிரகவாசிகள் போல் யாரிடம் முறையிட்டால் பலன் கிடைக்கும் என்ற விரக்தியில் நாட்களை நகர்த்தி வாழ்கின்றனர்.  குளத்துள்வாய்பட்டி இலங்கை அகதிகள் முகாம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், சுரைக்காய்பட்டி பஞ்சாயத்தில் உள்ளது. வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு வசிப்போரை கணக்கெடுக்க தவறாமல் செல்வதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக கருதுகின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர யாரும் முன்வரவில்லை என முகாம் வாசிகள் முறையிடுகின்றனர்.

Related Stories:

More