×

டெல்டா மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்

* விடிய விடிய காவல் காக்கும் விவசாயிகள்
* கூடுதல் கமிஷன் கொடுக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை


டெல்டா மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாமல் விவசாயிகளின் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதால் விடிய விடிய விவசாயிகள் காவல் காக்கின்றனர். கூடுதலாக கமிஷன் வழங்குவதால் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஒரு போக சாகுபடியாக தற்போது சுருங்கிவிட்டதால் நிலத்தடி நீர் ஆதாரங்களை பயன்படுத்தி ஆங்காங்கு விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் 180 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் 110 இடங்களிலும், நாகை மாவட்டத்தில் 116இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஏ கிரேடு சன்ன ரகம் குவிண்டால் ரூ.1835ம், ஊக்கத் தொகையாக ரூ.70ம், பொது ரகம் குவிண்டால் ரூ.1815ம், ஊக்கத் தொகையாக ரூ.50ம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு நெல்லுக்கான தொகை மின்னணு வங்கிப்பண பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 2019-20ம் காரீப் பருவத்தில் அக்.1 முதல் செப்.31 வரை தஞ்சை மாவட்டத்தில் 5.39லட்சம் மெ.டன்னும், திருவாரூர் மாவட்டத்தில் 6 லட்சம் மெ.டன்னும், நாகை மாவட்டத்தில் 5.36 லட்சம் மெ.டன்னும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பருவத்தில் தமிழகத்தில் 24லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், தற்போது டெல்டா மாவட்டங்களில் கோடை அறுவடை தீவிரமடைந்து முடியும் நிலையிலும், சில இடங்களில் அறுவடை துவங்கும் நிலையிலும் உள்ளது. இதில் பல இடங்களில் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மடிகை, பனையக்கோட்டை, சடையார்கோயில், வெங்கரை ஊராட்சி திப்பன்விடுதி போன்ற பகுதிகளில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள் முன்பு நெல் மலைபோல் கொட்டி கிடக்கிறது. 10ஆயிரம் மூட்டை அளவுக்கு நெல் குவியல் குவியலாக தேங்கியுள்ளன. குறிப்பிட்ட அளவே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என அரசு உத்தரவு உள்ளதால் அதற்கு மேல் கொள்முதல் செய்வதில்லை என கொள்முதல் நிலைய அலுவலர்கள் தெரிவிப்பதாகவும், இதனால் விடிய விடிய நெல்லுக்கு காவல் காத்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதில் மழை வந்தால் தார்பாய் கொண்டு மூடவும், பிறகு உலர்த்தவும் என கொள்முதல் நடக்கும் வரை இப்பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவும் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களுக்கும் மேலாக நெல்லை கொட்டி வைத்திருக்கும் நிலையில் விவசாயிகள் உள்ளனர். மேலும் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் வெளி மாவட்ட நெல் வியாபாரிகளின் நெல் மட்டும் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் வழங்குவதை விட கூடுதலாக கமிஷன் வியாபாரிகள் வழங்குவதால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். நெல் கொள்முதல் இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக உள்ளூரை சேர்ந்த சிலரின் ஆதரவுடன் உள்ளூர் நிலத்தின் சர்வே எண் மூலம் வியாபாரிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். அத்துடன் பல பகுதிகளில் கோடை அறுவடை முடிந்துவிட்ட நிலையிலும், பல இடங்களில் கோடை சாகுபடியே நடக்காத நிலையிலும் எதற்காக இத்தனை நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது? என கேள்வி எழுப்பியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, கீழ்த்திருப்பூந்துருத்தி, கண்டமங்கலம், திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதில் வியாபாரிகளின் நெல் மட்டும் தான் கொள்முதல் செய்யப்படுகிறது.விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை. வெளிமாவட்ட நெல் வியாபாரிகள் மூலம் இரவில் லாரிகளில் நெல்லை கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். பின்னர் பகலில் விவசாயிகள் நெல் போல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ஒரு வருவாய் கிராமத்திற்கு ஒரு நெல் கொள்முதல் நிலையம் போதுமானது. எதற்காக 2 கொள்முதல் நிலையங்கள் என தெரிய வில்லை. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து தினமும் லாரிகளில் நெல் கொண்டு வரப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் உள்ளூர் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யப்படாமல் சாலையில் கொட்டி கிடக்கிறது. ஏன் இந்த பாரபட்சம்? என தெரிய வில்லை. நெல்வியாபாரிகளின் நெல் கமிஷனுக்காக கொள்முதல் செய்யும் போக்கில் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் ஒரு விவசாயி, உழவு மானியம் ரூ.500 பெற வேண்டும் என்றால் அவர்களிடம் கம்ப்யூட்டர் சிட்டா, கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல், ஆதார் கார்டு, ரேசன் கார்டு, நடப்பு ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ளாரா? என கிராம நிர்வாக அலுவலரின் சான்று என பல்வேறு சான்றுகள் கேட்டு கட்டாயப்படுத்தப்படுகிறது. ஆனால் வியாபாரிகளின் நெல் கொள்முதலின் போது இந்த விதிமுறைகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளது எதற்காக? என்பதை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விளக்க வேண்டும் என்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் 180 இடங்களிலும்,திருவாரூர் மாவட்டத்தில் 110  இடங்களிலும்,நாகை மாவட்டத்தில் 116 இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

Tags : Delta District ,Procurement Stations ,Stacked Rice Bundles , Stacked Rice ,Bundles , Procurement Stations ,Delta District
× RELATED லத்தூர் ஒன்றியத்தில் 3 அரசு நேரடி நெல்...