×

மிரட்டி பாலியல் பலாத்காரம் - கருக்கலைப்பு எஸ்.ஐ., ஏட்டு உள்பட 11 பேர் மீது கலெக்டரிம் இளம்பெண் பகீர் புகார்: உயிருக்கு பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தல்

நாகர்கோவில்: இளம்பெண்ணை மிரட்டி சப் இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்காரம் மற்றும் கருக்கலைப்பு செய்த விவகாரத்தில் எஸ்ஐ, ஏட்டு உள்பட 11 பேர் மீது கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். குமரி மாவட்டம் பளுகல் அருகே இளம்பெண் ஒருவரை சப் இன்ஸ்பெக்டர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் எஸ்.ஐ அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த பிரச்னை தொடர்பாக சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 11 பேர் மீது புகார் தெரிவித்து அந்த இளம்பெண் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:மார்த்தாண்டத்தில் ஒரு வாடகை வீட்டில் தற்போது வசிக்கிறேன்.

எனக்கு திருமணமாகி விவாகரத்து பெற்று 9 வயதில் ஒரு மகள் உள்ளார். அவள் விடுதி ஒன்றில் தங்கி படித்து வருகிறார். என்னை வாலிபர் ஒருவர் திருமணம் செய்வதாக ஏமாற்றி உடமைகளை அபகரித்து சென்றதால் அவரது வீட்டிற்கு கேட்க சென்றிருந்தேன். அப்போது அந்த வாலிபரும், அவரது குடும்பத்தினரும் என்னை கட்டி வைத்து தாக்கி காயப்படுத்தினர். இது தொடர்பாக பளுகல் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தேன். அதன் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் அங்கு பணிக்கு சேர்ந்துள்ள சப் இன்ஸ்பெக்டரிடம் பேசி பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளலாம் என்று போலீஸ் ஏட்டு ஒருவர் அழைத்து அவரது தொலைபேசி எண்ணை வழங்கினார். அந்த எஸ்ஐ கண்ணுமாமூடு பகுதியில் வீடு பார்ப்போம், அது பாதுகாப்பாக இருக்கும், உங்கள் வழக்கை விசாரித்து நல்லபடியாக முடிக்கிறேன் என்று பேசினார். நான்  அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன்.

இந்தநிலையில் மே 1ம் தேதி இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டரிடம் பேசினேன். இதையடுத்து மே 1ம் தேதி இரவு 8 மணியளவில் வீட்டுக்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் மொட்டைமாடிக்கு அழைத்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது என்னை கட்டிப்பிடித்து சத்தம் போடக்கூடாது என்று கூறி உடலுறவு கொண்டார். இந்தநிலையில் நான் கர்ப்பம் அடைந்தேன். பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டது. இதனை அறிந்த பின்னர் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் கருவை அழித்துவிட கூறினர். நான் மறுத்து விட்டேன். பின்னர் என்னை தொடர்ந்து மிரட்டி வந்தனர். இதுகுறித்து தக்கலை டிஎஸ்பிக்கு புகார் அளித்தேன். அவர் போலீசில் புகார் கொடுக்க கூறினார்.

பளுகல் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்து மனு ரசீது தந்தார்கள். ஜூன் 5ம் தேதி பாறசாலை மருத்துவமனையில் சென்று பரிசோதித்த போது கரு ஆறு வாரம், மூன்று நாள் ஆகியுள்ளது என்று ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிவித்தனர்.பின்னர் என்னிடம் பேசுவதற்காக அழைத்த சப் இன்ஸ்பெக்டர் நான் குடும்பத்தில் 3 பேரை திருமணம் செய்து கொடுத்து கஷ்டத்தில் உள்ளேன், குடும்பம் உள்ளது, டிபார்ட்மென்ட் என் மீது நடவடிக்கை எடுப்பார்கள். பிரச்னையாகிவிடும், கருவை கலைத்துவிடு, உனக்கு என்ன வேண்டும் என்றாலும் செய்கிறேன் என்று அவரும், அவருடன் இருந்தவர்களும் பேசினர். நான் மறுத்துவிட்டேன். அதன் பின்னர் குழந்தையை ரகசியமாக பிரசவித்துக்கொள். ஏற்பாடு செய்கிறோம் என்றும் கூறினார்கள். திருவட்டார் அருகே உள்ள கிளினிக்கில் கருவை பரிசோதிப்பதாக கூறி அழைத்து சென்றார்கள்.

அங்கு கருக்கலைப்பு செய்கிறார்கள் என்ற சந்தேகத்தில் நான் சத்தம்போட்டேன். சத்தம் கேட்டு அங்கு மக்கள் கூடினர். திருவட்டார் போலீசார் வந்தனர். விசாரித்து நடந்தவற்றை எழுதினர். பின்னர் தக்கலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் என்னை கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பி விட்டார்கள். இது தொடர்பாக டிஎஸ்பியிடம் புகார் தெரிவித்து விசாரணை நடந்தது. பின்னர் களியக்காவிளை அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு என்னிடம் பழைய கேஸ் பற்றி எழுதி அபிடவிட் தயார் செய்ய வேண்டும் என்று கேட்டு a 100 பத்திரம் மற்றும் வெள்ளை தாளில் கையழுத்துகள் வாங்கிவிட்டு ஸ்கேன் ரிப்போர்ட் பெற்று சென்று விட்டனர்.

மேலும் ஜூன் 9ம் தேதி காக்கி பேன்ட் போட்டு மப்டி உடையில் 2 பேர் வந்து புகார் கொடுத்தால் உன் மீது வழக்குபதிவு செய்யப்படும் என்றும் கூறினார்கள். மேலும் எனது அறையில் இருந்த மருத்துவ குறிப்புகள், எனது உடைகள், எனது போன் என அனைத்தும் எடுத்து சென்றிருந்தனர். இது தொடர்பாக எஸ்.பி.க்கு ஆன்லைனில் புகார் அனுப்பியிருந்தேன். பின்னர் சமரசம் பேசுவதாக கூறி வந்தவர்கள் என்னை தாக்கினர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் வரவில்லை. மாதர் சங்கத்திடம் புகார் தெரிவித்த நிலையில் இரவு போலீசார் வந்து விசாரித்தனர். இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் 11 பேரும்தான் காரணம், எனக்கு பாதுகாப்பும் தர வேண்டும்’ என்று புகாரில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Rajeev Bhagir ,Collectorim , Collector Rajeev Bhagir's, complaint,11 people, including abortion, SI and AE, urging life
× RELATED யானை தாக்கி விவசாயி பலி