×

கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்?; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு  விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், 1 முதல் 9-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பின் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில், அடுத்த கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறுந்தகவல்கள் அனுப்பி வருகின்றன. இது பெற்றோர்கள் மத்தியில் கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுந்தகவல்கள் வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வந்தனர். இது குறித்து தமிழக அரசுக்கும் புகார்கள் சென்றன. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல நிறுவனங்களும் அதில் பணிபுரியும் ஊழியர்களும், தினக்கூலி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாணவர்களையும் பெற்றோர்களையும் கல்வி கட்டணம் செலுத்தக்கோரி கட்டாயப்படுத்தக்கூடாது. ஊரடங்கு முடியும் வரை பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் இதனை அனைத்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டது.

இருப்பினும், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி  இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுவதால்,  ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி கல்வி நிறுவனங்கள் சார்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து, தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், ஆன்லைன் வகுப்பு நடத்த ஆசிரியர்களை வற்புறுத்தும்  நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? என்றும் இது தொடர்பாக தமிழக அரசு விரிவான விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூன் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Tags : teachers ,Tamil Nadu ,Government ,Madras High Court , How can teachers be paid without tuition fees ?; Madras High Court Question to Tamil Nadu Government
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...