×

பக்தர்களுக்கு அனுமதியில்லை; பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உலக புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை தொடங்கியது...!!

புவனேஸ்வர்: உலக புகழ் பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்தை பக்தர்கள் இல்லாமல் தொடங்கியது. ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழா மிகவும் உலக பிரசித்தி பெற்றது. பூரி தேர் திருவிழா ஆண்டுதோறும்  ஜூன் 23ம் தேதி தொடங்கி, 9 நாட்கள் நடப்பது வழக்கம். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக இந்த தேர் திருவிழாவிற்கு தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில்  தன்னார்வ தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதை ஏற்று, உச்ச நீதிமன்றமும் கடந்த 18ம் தேதி தேர் திருவிழாவுக்கு தடை விதித்தது. ஆனால், இந்த உத்தரவை மாற்றும்படி கோரி  ஜகன்நாத் சான்ஸ்கிருதி ஜகரானா மன்ச் உள்ளிட்ட  அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

அதில், ‘இந்த ஓராண்டு தோரோட்டம் தடை பட்டால், 12 ஆண்டுகளுக்கு நடத்த முடியாமல் போகும். எனவே, பக்தர்களின்றி தேர் திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்,’ என்று கோரப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே  தலைமையிலான அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முன்னதாக, மக்களின் சுகாதாரத்தில் எந்த சமரசமும் செய்யாமல், மாநில அரசும்,  கோயில் அறகட்டளையும் இத்தேர் திருவிழாவை நடத்தலாம் என மத்திய அரசு  தெரிவித்தது. இதையடுத்து, ‘பக்தர்கள் பங்கேற்க கூடாது. ஒவ்வொரு தேரையும் 500 பேர் மட்டுமே இழுக்க வேண்டும். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். தேரோட்டத்தின்போது மக்கள் கூடுவதை தடுக்க, பூரியில் தடை  உத்தரவு பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன், பூரி ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழாவை நடத்துவதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கடைசி நேரத்தில் நேற்று அனுமதி அளித்தன் மூலம் திட்டமிட்டப்படி இன்று தேரோட்டம் தொடங்கியது. பூரி ஜெகன்நாதர் கோயிலில் இருந்து ரத யாத்திரைக்கு பூசாரிகள் மற்றும் சேவயாத் கர்த்தர் ஜகன்நாதரின்  சிலை தேருக்கு கொண்டு வரப்பட்டு ரச யாத்திரை தொடங்கியது. கொரோனா நேரத்தில் பல்வேறு முக்கிய கோயில்களின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பூரி ஜகன்நாத் கோயில் ரத யாத்திரை நடைபெறுவது ஒடிசா மக்கள் மத்தியில்  பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Devotees ,world ,Puri Jegannadhar Temple ,Ratha Yatra , Devotees are not allowed; The world famous Puri Jaganathnath Temple with various restrictions started the Ratha Yatra ... !!
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...