×

உலகளவில் காலரை தூக்கி விடுகிறது இந்தியா; ஏய், கொரோனா... டாட்டா பைபை!: குணமடைவோர் எண்ணிக்கை 55,77 சதவீதமாக அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமானவர்கள் சதவீதம் தொடர்ந்து உயர்ந்தபடி இருக்கிறது. தற்போது, இந்த எண்ணிக்கை 55.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதால், தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் நோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், நாட்டில் 14,821 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,25,282 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 445 பேர் இறந்ததைத் தொடர்ந்து 13,699 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்டோரில் 1,74,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 2 லட்சத்து 37 ஆயிரத்து 195 பேர் குணமடைந்து உள்ளனர். இதன் மூலம், நாட்டில் 55.77 சதவீத கொரோனா நோயாளிகள் குணம் பெற்றுள்ளனர்.  உயிரிழந்த 445 பேரில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா 186, டெல்லி 63, தமிழ்நாடு 53 பேர் இறந்துள்ளனர். இது தவிர, உத்தரப்பிரதேசம் 43, குஜராத் 25, மேற்கு வங்கம் 15,  மத்தியப் பிரதேசம் 14, ராஜஸ்தான் 12, அரியானா 11, தெலங்கானா 7, ஆந்திரா, கர்நாடகா தலா 5, ஒடிசா 2, பீகார், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, பஞ்சாப் தலா ஒருவரும் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து 11வது நாளாக 10,000க்கு மேல் பாதிப்பு
கொரோனா பாதிப்பு நாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வருகிறது. இந்த வகையில் முதல் முறையாக, நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 14,821 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் தொடர்ந்து 11வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு:

ஒரேநாளில் 1.43 லட்சம் சோதனை
நாட்டில் கொரோனா தாக்குதல் தொடங்கியதில் இருந்து நேற்று வரையில், நாடு முழுவதும் மொத்தம் 69 லட்சத்து 50,493 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் மிகவும் அதிகப்பட்சமாக, நேற்று முன்தினம் மட்டுமே ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 267 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

பலி எண்ணிக்கையில் இந்தியா 8வது இடம்

தற்போது, உலகளவிலான பாதிப்பில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது. அதே நேரம், பலியில் 13,669 பேருடன் 8வது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் அமெரிக்காவும், அதற்கு அடுத்த இடங்களில் பிரேசில், இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், மெக்சிகோ ஆகியவையும் உள்ளன.

5 மாதங்களுக்கு பிறகு கோவாவில் முதல் பலி
கொரோனா பலி நடக்காத ஒரே மாநிலமாக, கடந்த 5 மாதங்களாக கோவா இருந்தது. நேற்று முன்தினம் இங்கும் முதல் பலி நடந்து விட்டது. வடக்கு கோவா மாவட்டம், மோர்லிம் கிராமத்தை சேர்ந்த 85 வயது முதியவர், கொரோனாவுக்கு பலியானார்.

தமிழகத்தை முந்தியது டெல்லி
இந்திய அளவிலான கொரோனா பாதிப்பில் ஏற்கனவே 2ம் இடத்தில் இருந்த டெல்லியை தமிழ்நாடு பின்னுக்கு தள்ளியது. ஆனால், கடந்த 3 நாட்களாக  டெல்லியில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இதன் காரணமாக, டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 59,746 ஆக உயர்ந்துள்ளது. ஆனால்,  தமிழ்நாட்டின் பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆக உள்ளது. இதன்மூலம், டெல்லி மீண்டும் 2வது இடத்துக்கு வந்துள்ளது.

Tags : India ,Corona ,Tata , India, Corona, Increase of healers
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...